பத்மஜாவின் பதிவுகள் பல நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தன. குரோம்பேட்டை கிளை யூனியன் நடவடிக்கைகளுக்குப் பெயர் போனது. இரண்டுமுறை இருமினால் யூனியனுக்கும், தலைமை அலுவலகத்திற்கும் செய்தி போய்விடும். நான் கிளைக்குச் சென்று சில நாட்களிலேயே, Leather business செய்துவந்த வாடிக்கையாளரின் மொத்த குடும்பமும் விபத்தில் இறக்க, தப்பிப்பிழைத்தது இருபது வயதான பெண்ணும், பெண்ணின் கணவரும். மாதாந்திர விலக்கு கோயிலுக்குச் சென்ற குடும்பத்துடன் சேராமல் அவரைக் காப்பாற்றியது. அவர் வீட்டிற்கு சென்றால், பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பூவும், குங்குமமும் வைத்துப் புதுக்கருக்கு களையாமல். பத்துநாட்கள் கழித்து அந்தப் பெண் வங்கிக்கு வந்தது. அவரது அப்பா, சகோதரர்கள் யாருக்குக் கடன் கொடுத்தார்கள் தெரியவில்லை. வங்கியில் வாங்கிய கடனுக்கு இறப்பைப் பொருட்படுத்தாது கணிணி வட்டியைத் தினமும் ஏற்றிக் கொண்டிருக்கிறது. வெளியில் கடன்கொடுத்தவர்கள் நினைவாக வந்து இந்தப்பெண்ணிடம் கேட்கிறார்கள். பேக்டரியை மூட வேண்டும்.
அப்பா, அம்மா பெயரில் இருந்த லாக்கரில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ளவே அந்தப்பெண் வந்திருந்தது. சட்டப்படி அந்தப்பெண் அந்த லாக்கரைத் திறக்க பலகட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கும். ஆனால் எல்லோர் வீட்டிலும் இறந்தவர் புகைப்படங்கள் அப்படி வரிசையாக அடுக்கியிருக்காது. நீங்கள் லாக்கரைத் திறந்ததை வெளியில் சொன்னால் என் வேலை போய்விடும், ஆனால் உங்களை அனுமதிக்கிறேன் என்றேன். பதினைந்து வருடங்கள் கழித்து தி.நகரில் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. என் பார்வையைச் சந்தித்ததும் கூச்சத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டது. அதற்கு அடையாளம் தெரியவில்லை, ஆனால் உள்ளுணர்வு வேறு எதுவோ சொல்லும் குழப்பம் முகத்தில், காருக்குள் சென்று அமரும் வரை.

ஒன்பதாயிரத்து எண்ணூறு இருக்கும் கணக்கில், நாமே முந்நூறு ரூபாயைக் கட்டிவிட்டு பத்தாயிரம் ரூபாயை அந்த எளிய தோற்றம் கொண்ட பெண்ணின் கையில் கொடுத்ததை வாடிக்கையாளர் புகார் செய்தால், தொந்தரவு. நிரந்தர வைப்புப் பணத்திற்கு மாதவட்டி இரண்டுநாட்கள் இருக்கும் போது, பஞ்சுபஞ்சாய் தலையுடன் வந்த பெண்ணின் காசோலையைத் தவறுதலாக! அவரது சேமிப்புக் கணக்கில் Pass செய்தது தெரிந்தால் பிரச்சனை. எத்தனையோ நினைவுகள் இது போல.
Rule booksஐ வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளையும் கழித்திருந்தால், பாதுகாப்பாக இருந்திருக்கும். இப்போது யாருக்கும் நானாகச் சொல்லும் வரை நினைவில் இருக்கப் போவதில்லை. ஆனால் அவர்கள் நினைவில் நிலைத்து நிற்கவேண்டும் என்று நான் அவற்றைச் செய்யவில்லையே.

Leave a comment