ஆசிரியர் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர. மேடை நாடகக் கலைஞராகவும், பேச்சாளராகவும், திரைப்பட உதவி இயக்குனராகவும் இருந்துள்ளார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் முதலியன ஏற்கனவே வெளியானவை. சமீபத்தில் எழுதப்பட்ட இந்த நாவல், 2022க்கான சௌமா இலக்கியவிருதைப் பெற்றுள்ளது.

அஜ்னபி, ஒச்சை போன்ற நாவல்கள் மூலம் எல்லோருக்கும் அறிமுகமானவரே மீரான் மைதீன். நாஞ்சில் மொழியில் கதை எழுதுபவர்களில் ஒருவர். நாஞ்சில் நாடனின் கதைகளில் வரும் அதே நகைச்சுவை, இடக்குப்பேச்சு இவரது படைப்புகளிலும் முழுதும் கலந்திருக்கும். இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று வாசகர்கள் நினைக்கும் பக்க அளவிற்குள் இவரது நாவல்கள் முடிந்து விடும்.

பட்டாளம், தானியேலாசான் என்ற இரண்டு வயதான மையக்கதாபாத்திரங்களே நாவல் முழுவதும். பட்டாளத்திற்கு எழுபது வயது, தானியேலாசானுக்கு பன்னிரண்டு வயது குறைவு. இவர்களுடன் சரக்கைக் காலிசெய்யக் கடைசி ரவுண்டிற்குத் தவறாது வரும் முப்பத்தெட்டு வயது சந்திரன். குடித்துவிட்டுப் பேசும் ஊர்நியாயங்களே இந்தக்கதை.

மதுரை A A ரோடில் நண்பர் குழாமுடன் நின்றுகொண்டு மணிக்கணக்கில் கழித்த பொழுதுகள் நினைவுக்கு வந்தது. இப்போது யோசித்தால் அந்தப்பேச்சுகள் ஊர்புரணியைத் தாண்டி ஒன்றுக்கும் உதவாதவை. பட்டாளம், தானியேலாசான் இருவருமே தினமும் குடித்து, உளறிவிட்டுத் தள்ளாடிப் போய் நாட்களைக் கழிப்பவர்கள்.

பட்டாளத்திற்கு இறந்த மனைவி மீது கொள்ளை ஆசை. இந்த நாவல் நானூறு பக்கம் இருந்திருந்தால் குளத்தில் குதூகலம் போல இன்னும் பத்து கதைகளைச் சொல்லி இருப்பார். உடல் ஓய்வு பெற்றுக் கொள்ளும் போது, காமம் வார்த்தைகளின் வழியே வெளியேறுகிறது. தானியேலாசான் குடித்து விட்டு அழுபவர். சிலம்பு கற்றுக்கொடுக்கும் ஆசானாக இருந்து, உடலில் உறுதியையும், மனதில் பயத்தையும் கொண்டவர். சந்திரன் மனைவியைக் கைக்குள் போட்டுக் கொள்ளும் வித்தை தெரிந்தவன். பட்டாளத்தார் ஒரு ரவுண்டு குடித்துவிட்டுப் பேசும் கெட்ட வார்த்தைகளைச் சொல்லாமல், மனைவியை தெய்வமாக மதிக்கவேண்டும் என்று பட்டாளம் சொன்னதை போதையிலும் மறக்காமல் மனைவியிடம் சொன்னவன்.

ஊர் விஷயங்களைப் பற்றிப் பேசியே கழியும் நாவலில் எல்லா ஊர்களிலும் வருவதைப் போல் மாற்றங்கள் நேர்கிறது.
எல்லோருமே திருடர்கள் என்றான பின்னர் அவன் எனக்குப்பிடித்த திருடன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
முழுக்க சிரித்துக் கொண்டே வாசித்துப் பலநாட்களானது. இந்த நாவல் அதைக் கொடுத்தது. மீரான் மைதீன் சாலையில் நிற்கும் செடியின் உட்புறம் யாரும் அதிகம் கவனிக்காத இடத்தில் பூக்கும் பூ. வாசகர்கள் தான் மெனக்கெட வேண்டும்.

பிரதிக்கு:

புலம் 98406 03499
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.130.

Leave a comment