புக்கிகளின் மீது, குறிப்பாக இலக்கிய புக்கிகளின் மீது என்னுடைய மரியாதை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. சென்ற வருடத்தின் அவர்கள் கணிப்பு இவ்வருடத்தில் நிஜமாகி இருக்கிறது. ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்பது சாதாரணமான காரியமே இல்லை. ஏராளமான Permutations and combinations போட வேண்டியிருக்கும். நானெல்லாம் இறுதிப்பட்டியலில் ஆறில் நான் நினைத்த நூல் வென்றால் இறுமாப்பு கொள்கிறேன். 2019ல் புக்கர் இறுதிப்பட்டியலில் Annie Ernaux வந்தார், ஆனால் அப்போது கிண்டிலில் அந்தப் புத்தகம் இல்லை. சென்ற வருட புக்கிகள் கணக்குப்படி Annie முதலாவதாக வந்தார். நான் The Years வாங்கினேன், ஆனால் படிக்கவில்லை. இப்போது அவசியம் படிப்பேன். புத்தகங்கள் வாங்குவது வேறு, படிப்பதென்பது வேறு. நான் உலகைவிட்டு செல்கையில் வாங்கியும் படிக்காத புத்தகங்களை நிச்சயமாக விட்டுச் செல்லப் போகிறேன். மொத்தம் எத்தனை புத்தகங்கள் என்பதே இன்றைய தேதியில் இரகசியமானது.
ஆர்வமுள்ளோர் சென்ற வருடத்தில் வெளியான இந்தக்கட்டுரையை வாசிக்கலாம். இந்தக் கட்டுரைக்கு தலைப்பை வைத்தது ஜீவகரிகாலன்.
நன்றி வியூகம். நன்றி உமா வரதராஜன்.
வியூகம் ஒன்பதாவது இதழில் என் கட்டுரை.
நோபல் எனும் மாயப்புரவிகளின் லாயம்.
நோபல் பரிசுக்கு தேர்வுக்குழுவிற்கு பெயரை அனுப்புவதற்கு ஒரு நடைமுறை இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளர்கள், விமர்சகர்கள், இலக்கிய அமைப்புகள், ஏற்கனவே நோபல் பரிசு பெற்றோர் மற்றும் ஸ்வீடிஸ் அகாதமி ஆகியோரால் உலகமெங்கும் இருந்து எழுத்தாளர்களின் பெயர்கள்
தேர்வுக்கு எடுக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து ஒரு பெயரை ஐவர் குழு கொண்ட நோபல் கமிட்டி தேர்ந்தெடுக்கிறது. மற்ற விருதுகள் போல் தனிப்பட்ட படைப்புக்கு விருது வழங்காமல், அவரது மொத்த படைப்புகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. குறைந்த பட்ச வயது என்று விதிமுறைகள் இல்லாத போதிலும் நோபலைப் பொறுத்தவரை அறுபது வயதுக்கு மேல் இருப்பவரே, பெரும்பாலும்தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இறந்தவர்களின் படைப்புகள் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. தனிப்பட்ட வாழ்க்கை, சமூக நிலை, பிம்பம், நிறம், நாடு எதையும் தேர்வுக்குழு பார்ப்பதில்லை, இலக்கியத்தரம் மட்டுமே அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது என்று நோபல் கமிட்டி பலமுறைகூறியிருக்கும் போதிலும் இலக்கியத்தரம் என்பதற்கான விளக்கத்தை யாரும் கொடுப்பதற்கில்லை.
நார்வே பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் ஐவர் குழுவின் பதவி காலங்கள் ஐந்து வருடங்கள். புக்கர், புலிட்சர்போல தேர்வுக்குழுவின் நீதிபதிகளில் பலர் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் தகுதி வாய்ந்தவர்களாகஇருப்பதில்லை. தேர்வாளர்களின் நியமனங்களை இரகசியமாகவே தேர்வுக்குழு வைத்திருக்கும். வெற்றிபெற்றவர் பெயரை தேர்வுக்குழு அறிவிக்கும் வரை எல்லாமே இரகசியம், வெளிப்படையாக எதுவுமே நடக்காது. எதற்காக அவர்கள் தேர்வு செய்தார்கள் என்பது கூட ராஜா மெச்சினதே ரம்பா என்ற அளவிலேயே இருக்கும். பின் எதனால் நோபலுக்குஉலகஅளவில் இவ்வளவு மதிப்பு? புக்கர் விருதின் இந்திய மதிப்பான 51.14 லட்சங்கள் மற்றும் புலிட்சர் விருதின் 11 லட்சங்களை விட, நோபலின் பரிசுத் தொகையான 8.70 கோடி ரூபாய்கள் பல மடங்கு அதிகமானது. ஒருவகையில் பரிசுத் தொகையின் மதிப்பே, நோபலை இன்றும் உலக அளவில் பெரிய விருதாக அடையாளம் காட்டி வருகிறது.
வழமை போலவே 2021 க்கான நோபல் பரிசு யாருக்கு என்பதை யாருமே சரியாக யூகிக்கவில்லை. புக்கிகளின் கணிப்பின் படி Annie Ernaux மற்றும் Ngũgĩ wa Thiong’o இருவரும் முதல் இடத்தில். கார்டியன் உள்ளிட்ட பலநம்பகமான பத்திரிகைகள்
Annie Ernauxக்குக்கே அதிக வாய்ப்பு என்றன.
Ngũgĩ wa Thiong’o வும் Margaret Atwoodம் உலகவாசகர்களின் பெருமதிப்புக்கு உரியவர்கள். Ngũgĩ wa Thiong’o பல படைப்புகளில் முதலாளித்துவத்தின்மீதான நேரடித் தாக்குதலை நடத்தியவர். Atwoodஐப்பொறுத்தவரை அவர் நாட்டைச் சேர்ந்த Alice Munro 2013 ல்விருதுபெற்று அதிக வருடங்கள் ஆகவில்லை. சீன எழுத்தாளர் Can Xue மற்றும் செக்கோஸ்லாவாகியா எழுத்தாளர் மிலன்குந்த்ரா (92 வயது) ஆகியோர் போல் விருதுக்கு முழுத்தகுதி வாய்ந்த பலர் புக்கிகளின் அனுமானப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். Hilary Mantel இடம் பெற்றிருந்தார். முரகாமி பட்டியலில் முதல் நான்கு பேர்களுக்குள் வந்திருந்தார். ஆச்சரியப்படும் வகையில் Salman Rushdie மற்றும் Stephen King இருவரும் ஒரே எண்ணிக்கையிலான வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். முரகாமி மற்றும் கிங்கைப்பொறுத்தவரை இருவரும் சீரியஸ் மற்றும் வெகுஜன வாசகர்களால் அதிகம் படிக்கப்பட்டு, மிகப்பிரபலமாக இருப்பதே நோபலைப் பொறுத்தவரை எதிர்மறைத் தகுதி. ருஷ்டியைப் பொறுத்தவரை அவரது நாத்திகத்தன்மையும், இஸ்லாம் மீதான விமர்சனங்களும் மற்ற சர்ச்சைகளும் நோபல்கமிட்டிக்கு ஏற்பில்லாமல் இருந்திருக்கலாம்.
அப்துல்ரசாக் புக்கிகளின் எந்தப் பட்டியலிலும் இடம்பெறவில்லை என்பது மட்டுமல்ல, அவரைப் படித்தவர்களே தீவிர வாசகர்கள் நடுவிலும் வெகுகுறைவு. அவரது புத்தகங்களும் உலகச் சந்தையில் எளிதாகக் கிடைக்கவில்லை. நோபல் கமிட்டி இவரைத் தேர்ந்தெடுத்தற்குச் சொல்லிய காரணம், காலனி ஆதிக்கத்தின் தாக்கத்தையும், அகதிகளின் துயரங்களையும்படைப்புகளில் கொண்டு வந்தவர் என்பதே. அப்படிப் பார்த்தால் Chinua Achebeஐ விட யார் காலனி ஆதிக்கத்தின் தாக்கத்தைபடைப்புகளில் கொண்டு வந்திருக்கிறார்கள்? காலனிஆதிக்கத்தையும், அகதிகளின் பிரச்சனைகளையும் இலக்கியநுட்பத்துடன் கொண்டு வந்த Isabel Allendeஐ நாம் எங்கே
வைப்பது? இது யானை மாலை போடும் வழிமுறை, எனவே நாம்கேள்வி கேட்பதற்கில்லை.
இந்தக் கட்டுரை எழுதுமுன் ரசாக்கை படிக்காமல் எழுதத்கூடாது என்பதற்காக அவருடைய சிறந்த நாவல் எனப்பலரும் சொல்லும் Paradise நாவலைப் படித்தேன்.
ரசாக்கின் மொழிநடை, கதைசொல்லல், கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தல் எல்லாமே சிறப்பாகஇருக்கின்றது. நமக்கு அறிமுகமில்லாத பிரதேசங்களுக்கு நாவலின் மூலம் நம்மை கூட்டிச் செல்லும் எந்த எழுத்தாளரும் சிறந்த எழுத்தாளரே.
ஆனால் நோபல் கமிட்டி சொல்வது போல் இலக்கியத்தரம் மட்டுமே அளவுகோல் என்றால் வாழும் எழுத்தாளர்களில் குறைந்தது ஐம்பது பேரையேனும் இவரைவிட இலக்கியநுட்பம் வாய்ந்தவர்களாக நம்மால் அடையாளம் காணமுடியும். அதற்காக நாங்கள் விரும்பியவரைத் தான் தேர்ந்தெடுப்போம் என்று நோபல் கமிட்டி வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்ற நம் எதிர்பார்ப்பும் தவறல்ல