Neighbour’s Envy, Owner’s Pride என்ற Onida விளம்பரம் போல், வங்கியின் விற்பனைப் பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்கில்லை. அப்போது, ஒன்றே போல் நிரந்தர வைப்பு, அதில் மாதவட்டி அல்லது கூட்டுவட்டி, மாதாந்திர சேமிப்பு ஆகியவை எல்லா வங்கிகளுக்கும் பொதுவானவை.
பல தனியார் நிதி நிறுவனங்கள் 36% வட்டிக்கு பின்தேதியிட்ட காசோலைகளைக் கொடுத்து, பணத்தைச் சுருட்டிய காலகட்டத்தில், தனியார் வங்கிகள் குறித்த புரிதல் பொதுமக்களிடமில்லை. ICICI, UTI (now Axis) போன்ற பெரிய தனியார் வங்கிகள் தோன்றவேயில்லை. தனியார் வங்கிகளை ஏதாவது அரசுவங்கி எடுத்துக்கொள்ளப் போகிறது என்ற பேச்சு நடந்து கொண்டே இருக்கும்.

வங்கியில் பாரம்பரியமாக இரண்டு வேலைகள், பொதுமக்களிடம் பணத்தை வாங்கி அவர்களுக்கு வட்டி கொடுத்தல், அதை விட அதிகமான வட்டிக்கு தொழில் செய்பவர், வீடு, பொருட்கள் வாங்குபவருக்குக் கடன் கொடுத்தல். (Fee based income அப்போது பெரிய அளவில் இல்லை) Depositகளில் அநேகமாக அரசு வங்கிகளை விடத் தனியார் வங்கிகள் 50 அல்லது 100 Basis points அதிகவட்டி தரும். ஆனால் தனியார் வங்கியில் பணம் போடுவது பாதுகாப்பில்லை, முதலுக்கு மோசமாகி விடும் என்ற பயம் இருந்தது. அரசுவங்கிகளில் ” ஒரு தடவை சொன்னா உங்களுக்குப் புரியாதா?’ என்பது போன்ற வசவுகளை வாங்கிக் கொண்டு பொதுஜனம் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும். அதே நேரத்தில் ஒரு கோடி ரூபாய் கடனுக்கு ஒரு சதவீதம் வட்டி குறைந்தால் வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சேமிப்பு என்று அரசுவங்கிகளுக்கு ஒழுங்காக கடனைத் திருப்பி செலுத்துவோரும், அவ்வளவாக திருப்பிச் செலுத்தும் நம்பிக்கை இல்லாதவர் தனியார் வங்கிகளுக்கும் வருவார்கள்.

தனியார் வங்கி மேலாளர் பதவி என்பது அப்போது குறைந்த அதிகாரமும், ஏராளமான பொறுப்புகளும் கொண்டது. இது போன்ற சமனில்லாத போட்டிக்களத்தில் (Level playing field) வாங்க வாங்க என்ற வரவேற்பு, பெண்ணைக் கோயம்பத்தூரில் கொடுத்தீர்களே, ஏதாவது விசேஷம் உண்டா என்ற குசலம், போன்றவற்றைத் தாண்டி ஏதேனும் செய்தாக வேண்டும். ஐம்பது லட்ச நடப்புக்கடன் கணக்கிற்கு, ஒரு வாரத்திற்கு ஐந்து லட்சம் அதிகமாக அனுமதிக்கலாம். ஆனால் கடனாளி கட்டாவிட்டால் மேலாளர் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். நிரந்தரவைப்புக்கணக்கைப் பிணையமாக வைத்துக்கூட கடன் கொடுக்காதவர்கள் எந்தவித சேதாரமுமில்லாமல் அறுபதுவயதில் மாலையை வாங்கிக் கொண்டு, வங்கிக்கணக்கில் நல்ல தொகையும் வைத்துக் கொண்டு வெளியே வருவார்கள். மற்றவர்கள் எல்லோருக்குமே தலைக்கு மேல் Damocles Sword ஆடிக்கொண்டே இருக்கும்.

அந்த அம்மா தன்னையே நம்ப மாட்டார். நல்ல அழகு, ஏராளமான பணம். கணவர் இல்லை. நாற்பதுகளிலேயே அவ்வளவு அழகாக இருந்தவர், முப்பதுகளில் கணவர் இறந்தபோது இன்னும் அழகாக இருந்திருக்க வேண்டும். அவ்வளவு அழகையும், பணத்தையும் எப்படியோ பாதுகாத்து வந்துவிட்டார். இப்போது பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார். லாக்கர் முடித்து வந்தவரிடம் எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கிறார் என்று கேட்டேன்.
” அப்படியே உங்களைப் போல இருக்கணும் சார், அமைதியான பேச்சு, நல்ல பதவி, நீங்க யார்கிட்டயும் கோபப்பட்டே பார்த்ததில்லை, உங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகலைன்னா பத்துப் பன்னிரண்டு வயசு வித்தியாசத்தக்கூட நான் கண்டிப்பா பார்க்க மாட்டேன்” என்றார். UTI, IDBI புதிதாகத் தொடங்கிய போது Commercial Banking அனுபவமுள்ள திறமைசாலிகள் அதிகம் இல்லை, வெறுமனே முகத்தைக் காட்டினால் போதும் என்று திரும்பத்திரும்பக் கூப்பிட்டார்கள். வங்கி விஷயத்தில் மட்டுமல்ல, பெண்கள் விஷயத்திலும் நான் எப்போதும் தப்புக்கணக்குத்தான் போலிருக்கிறது.

Leave a comment