மகள் தன் வீட்டில் திருடன் வந்து போனதாகவும், பொருட்கள் எதுவும் களவு போகவில்லை, ஆனால் ஆயிரக்கணக்கான புத்தகங்களில் எதுவும் போயிருந்தால் கண்டுபிடிக்க முடியாது என்றவுடன் அம்மா சொல்கிறாள் “அத்திருடனுக்கு கொஞ்சம் நம் வீட்டு முகவரியையும் கொடுத்துவிடு. உன் அப்பா வீடு நிறைய நிறைத்து வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து கொஞ்சம் விடுதலை கிடைக்கட்டும்”. புத்தக விருப்பும், வெறுப்பும் உலகமெங்கும் இருக்கும் வீடுகளில் இணைகோடுகளாகப் போய்கொண்டிருக்கும் போலிருக்கிறது.

ஆணாதிக்க சமூகத்தில் ஆண்களும், பெண்களும் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கதைகளில் கற்பிக்கிறார்கள். சாலையோர வியாபாரி, ஜீன்ஸ் அணிந்து பெண்கள் சென்றால் அவர்கள் உடலை வெறித்து வியாபாரத்தைத் தவறவிடுகிறான், புகைபிடிக்கும் இலண்டன் மனைவியை காரணமே சொல்லாமல் பிரிவோம் என்கிறான் கணவன், காதலித்த பெண் படுக்கையில் இருந்து கொண்டே அலுவலகத்திற்குச் செல்கையில் விடை கொடுத்த குற்றத்திற்குப் பொருமுகிறான் ஒருவன் (பின்னே தெருமுனையில் தலை மறையும் வரைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டாமா?), காத்திருக்க முடியாதென்றால் கல்யாணம் செய்ய முடியாது, ஆளுமை நிறைந்த பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது என்று ஆண்களின் குரல்கள் உச்ச ஸ்தாதியில் கதைகள் முழுதும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. கதைகளை எழுதியவர்களில் பாதிக்கு மேல் பெண்கள்.

தலைப்புக் கதை வித்தியாசமானது. பெண்கள் சேர்ந்து கொண்டு, ஒரு பெண்ணைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதற்கு எப்போதும் வலுவான காரணமொன்று இருக்க வேண்டியதில்லை. தாகம் கதையில் கணவன் பணக்கார நண்பனுக்கு மனைவியை ஏற்பாடு செய்கிறான் ( எழுத்தாளருக்குத் தூக்குத் தண்டனை எதுவும் விதிக்கவில்லையா!) பெண்களுக்கு மிகப்பெரிய தொகையை வரதட்சணையாகக் கொடுத்து திருமணம் செய்து கொள்வதாக இரண்டு கதைகளில் வருகின்றன. 1929ல் இந்தியாவில் குழந்தை திருமணத்தடுப்புச் சட்டம் வந்து விட்டது. கடைசிக் கதையில் போகிற போக்கில் இந்தியாவில் குழந்தைகளுக்கு மணம் முடிப்பார்கள் என்று சொல்கிறார்கள்.

ஒரு மாத காலம் அரபு இலக்கியம், குறிப்பாக பெண்கள் எழுதியதை வாசித்ததில் தெரிந்துகொண்டது, அவர்கள் நாங்கள் பாவம் என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்வது. இந்தக் கதைகளும் பெரிய விதிவிலக்கல்ல. வஜ்ஹிர்மிலா பாத்தினா தனித்துத் தெரிகிறார். சிறிது எடிட்டிங் செய்தால் நல்லதொரு Flash Fictionஆகக்கூட இதை மாற்றலாம். இவரது மற்ற கதைகளை வாசிக்க வேண்டும். அமீரகத்தின் கதைகளைத் தமிழுக்குக் கொண்டு வருவது நல்ல முயற்சி. அல்கொஸாமாவில் கனகராஜ் பதூவிகளைப் பற்றி முழுக்க எழுதியிருந்ததால் ‘ உள்ளங்கை’ கதைக்குள் எளிதாக உட்புக முடிந்தது. இந்தத் தொகுப்பில் குறிப்பிட வேண்டிய விஷயம் மிகத்தெளிவான மொழிபெயர்ப்பு. The face of a facinating widow என்பதில் Fascinating என்பதற்கும், Widow என்பதற்கும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கவனிக்க வேண்டும். குறிப்பாக Widow என்றால் உடன் மனதில் வருவது விதவை. பிரியா தொடர்ந்து மொழிபெயர்ப்பை விடாது செய்ய வேண்டும்.

பிரதிக்கு:

டிஸ்கவரி புக்பேலஸ் 8754507070
முதல்பதிப்பு October 2022
விலை ரூ. 120.

Leave a comment