ஆசிரியர் குறிப்பு:

இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பைச் சேர்ந்தவர். உளவியல் பயின்றுள்ளார். ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார். சமூக விஞ்ஞானம், தத்துவம், வரலாறு,கலைத்துறை சார்ந்த தீவிரத்தேடலும் ஆர்வமும் கொண்டவர். நாங்கூழ், கடல் காற்று கங்குல், வண்ணத்திக்காடு முதலிய மூன்று கவிதைத் தொகுப்புகளை இதுவரை வெளியிட்டுள்ளார். எழுதுவது மட்டுமன்றி வாசித்த நூல்கள் குறித்தும் அவருடைய Blogல் பகிர்கிறார்.

ஈழத்தின் பல கவிஞர்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்கள் கவிதைகளின் மொழியில் மயங்கி, வெளிவந்து மீண்டும் ஒருமுறை அர்த்தம் புரியப் படிக்க வேண்டியதாகிறது.

” புள்ளிகள் குவிந்த
நுரைகளின் குமிழுக்குள்
செறிந்திருக்கும் காற்று
ஒரு சொல்லளவு படித்திறன்
நெகிழும் ரேகைகள்
அசையும் வளையங்கள்
பாதைகள் வரைந்த திசைகள் தோறும்
கடற்கோள் கணையாழிகள்”

” வெம்மையின் சிரிப்பில்
எங்கும் வெப்பச்சலனமழை
என் திசை எதிரில் மட்டும்
தோன்றாக் காற்றின் திசை”

மின்ஹாவின் கண்ணில் தோன்றுபவை எல்லாம் காட்சிகளின் அழகியல். எல்லோரும் வெட்கப்பட வேண்டிய நிகழ்வு கூட நுணுக்கமாக வந்திருப்பதால், சற்று நிதானித்து வருத்தப்பட வைக்கிறது.

” கலைந்த நிர்வாணத்தைப்
பெருங்காற்று மணல்
புழுதியுடையால்
மாராப்பிடுகிறது”

வார்த்தைகளை கைவிரல்களிடையே சுழற்றும் சாட்டையைக் கொண்டு பம்பரத்தை சுழல வைப்பது போல் செய்கிறார். அனுதினம் நடக்கும் நிகழ்வை இவரது பார்வை கவிதைக்கண் கொண்டு பார்க்கிறது.

” அலைகளில்லா நிசப்தம்
கரை தடவிச் சென்றதும்
அந்தியின் பிந்திய பகுதியில்
இருள் கரைந்து கொண்டது”

” நிலம் எங்கும் சுற்றிச்சுற்றி
நிலைக்குத்துச் சுவர் ஏறி
தடைதாண்ட எத்தனிக்கும்
உந்துதல் ஒன்றைப் போதிக்கின்றது
ஆதாரமற்ற கொடி”

எழுதுவதை நிறுத்த நினைத்தாலும் கசியும் மை காகிதங்களை நிறைக்கிறது என்கிறார்.
ஒரு கவிதையில். இது போன்ற கவிதைமனம் அலைபாய்ந்து கொண்டிருந்தால் எந்தக் கயிற்றை வைத்துக் கட்ட முடியும்”

” ஊடலில் விலகிய எழுதுகோலில்
படிந்திருக்கும் ஒளிக்கும் நிழலுக்குமான கூடலை சிலாகிக்கும் சிதிலமடைந்த சுவர்”

கேள்வி:

” கற்கள் எங்ஙனம் பற்றையாகும்”

பதில்:

” முன்னர் களிம்புற்ற அகத்தேக்கம்
செம்மஞ்சளில் பிரிந்த
கபிலநிறத்திட்டுகளான
பெரும்பரள் உள்ளடுக்கு
சுமத்தலின் பாறைப்படிகம்”

இரண்டு தொகுப்பின் கவிதைகளிலும் தத்துவார்த்தம் சந்தடியின்றி உள்ளே நுழைந்து வெளியே போகிறது. என்னளவில் ஆகச்சிறந்தது இது. புத்தகத்தை சிறிது நேரம் மூடி வைத்தேன்.

” திறக்கப்படாத நாள்களின் சாவி
எங்கு தொலைந்திருக்கும்”

” நீர்ச்சுழியில் அமிழ்தலின்றிச் சுழன்று
மேல் மிதக்கும் இலையே
அமைதியின் மெய்நிலை”

தேர்தல் வாக்கெடுப்பின் அபத்தங்கள், ஏதிலியாய் அலையும் வாழ்க்கை, சிறுவயதில் பாண்டி விளையாட்டு விளையாடிய நிலத்திற்காக உடன் பிறந்தோர் பின்னாளில் அடித்துக் கொள்வது, அம்மாவின் சர்க்கரை நோய் என்று அன்றாடம் பார்ப்பவை எல்லாமே கவிதைகளாகி இருக்கின்றன. அக உணர்வுகள் குறித்த கவிதைகளில் ஒரு தீராத உரையாடல் நடந்து கொண்டே இருக்கிறது. சில கவிதைகளில் கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

ஒரு வருட இடைவெளியில் நாங்கூழுக்குப் பிறகு வந்தது கங்குல். எத்தனை முறை சொன்னாலும், ஈழத்தில் தமிழ் கற்றுக் கொள்பவர்களின் மீதான பொறாமை போகாது போலிருக்கிறது. பெரும்பாலான கவிதைகள் நேரடியாகச் சொல்லப்படாமல், வாசகர் முனைந்து உட்செல்லும் வழியைக் கொண்டிருக்கின்றன. இருத்தல் என்னும் மூட்டையின் பாரத்தைச் சுமக்கமுடியாது திணறுவதைச் சொல்லும் சில கவிதைகள்.
மின்ஹாவின் மொழியும், சொல்லும் விதமும் அழகு. புதிய தொகுப்பான ‘வண்ணத்திக் காடு ‘ நூலை அவசரமாக ஆர்டர் செய்து விட்டேன்.

பிரதிக்கு:

நாங்கூழ், கருப்புப் பிரதிகள் 94442 72500
முதல்பதிப்பு டிசம்பர் 2020
விலை ரூ.70
கடல் காற்று கங்குல் சீர்மை 80721 23326
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 100.

Leave a comment