நன்றி சமயவேல் சார். நன்றி தமிழ்வெளி.
தி.ஜாவின் நாவல்களில் அமிர்தம், அன்பே ஆருயிரே தவிர மற்ற எல்லா நாவல்களிலிருந்தும் ஒன்றை அவரது மாஸ்டர்பீஸ் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். கரம்சோவ் சகோதரர்களா இல்லை குற்றமும் தண்டனையுமா என்று கேட்டால் என்ன சொல்வது? நல்ல எழுத்தாளர்கள் எல்லோருக்குமே நேர்வது இது. தேவிபாரதியின் இதுவரை வெளிவந்த நான்கு நாவல்களில், நிழலின் தனிமை மாஸ்டர்பீஸ் என்று தமிழ் விக்கிப்பீடியா சொல்கிறது. நட்ராஜ் மகராஜ் என்று சொல்வோரும் உள்ளனர். நொய்யல் வெளிவந்ததும், அதுவா இல்லை நீர்வழிப்படூஉமா என்று சரிபாதி வாக்குகள் பிரிந்துவிடுகின்றன.
நல்ல நாவல்கள் என்று நாம் நினைவுகூர்வதில், முதலில் கதாபாத்திரங்களும் அடுத்து கதையம்சத்தையும் சொல்லலாம். தேவிபாரதியின் பெண் கதாபாத்திரங்கள் நினைவில் பலகாலம் நிற்பவர்கள். நீர்வழிப்படூஉம் காருமாமாவை மையமாக வைத்து நகர்ந்தாலும், ராசம்மா அத்தை மனதில் சட்டென்று ஒட்டிக்கொள்கிறார். நட்ராஜ் மகராஜில் ந வை சுற்றியே கதை நகர்ந்தாலும் அவனது மனைவியைச் சுற்றியிருக்கும் மர்மம் அவளை மறக்கவியலாமல் செய்கிறது. அதே போல் நிழலின் தனிமையில் சுலோ மேல் தோன்றும் இயல்பான இரக்கம், நொய்யலில்
சாமியாத்தா, காரிச்சி, பாரு என்ற பல பெண்கள்.
ஒருவரின் தவறால் குடும்பம் மொத்தமும் சிதைவது இவரது எல்லா நாவல்களிலும் நடக்கிறது. ராசம்மா அத்தை காருமாமாவை தலைநிமிர விடாமல் செய்கிறாள். சாமியாத்தா வேம்பனக்கவுண்டரை அதையே செய்தாலும் அதற்கான வித்து வேம்பனக்கவுண்டரிடமிருந்தே முளைக்கிறது. கடனால் அக்காவின் மீதான பாலியல் வல்லுறவும் அதன்பின் அந்தக் குடும்பம் ஒருபோதும் பழைய நிலைமைக்குத் திரும்பாததும் நிழலின் தனிமையில். எதிர்பாராது வரும் தகவல் ந வின் வீழ்ச்சிக்குக் காரணமாவது நட்ராஜ் மகராஜில்.
முதல் நாவல் நிழலின் தனிமை முழுதுமே ஒரு பழியின் கதை. பழி இருபுறமும் தீட்டப்பட்ட கத்தி. நட்ராஜ் மகராஜ் சமகால அரசியல், சமூக விமர்சனம். நீர்வழிப்படூஉம் காருமாமாவின் மூலமாக ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்வது. நொய்யல் மூன்று தலைமுறைக்கதையைச் சொல்லும் பாவனையில் நதியின் கதையும், பலரது கிளைக்கதைகளும் அடங்கிய பெருநாவல்.
தேவிபாரதியே பேட்டி ஒன்றில் கூறியது போல, நேர்ந்த, பார்த்த அனுபவங்களே அவரது நாவல்கள். யுத்தி தான் மாறுகிறது. நிழலின் தனிமை முழுக்கவே யதார்த்தமும், உளவியலும் நிறைந்தது. நட்ராஜ் மகராஜ் முழுக்கவே புனைவை சமூக விமர்சனத்திற்கு உபயோகித்துக் கொள்வது. நீர்வழிப்படூஉம் தன்வரலாற்று யதார்த்தம். நொய்யல் யதார்த்தம் மற்றும் மாயயதார்த்தத்தின் கலவை.
பாலியல் மிகவும் திறமையுடனும் நுட்பத்துடனும் கையாளப்பட்டிருக்கும். கணவன் முன்னேயே மனைவி இன்னொருவனுடன் உறவு கொண்டாலும் ( நிழலின் தனிமை) அருவருப்பு ஏற்படாதவாறு அதன் காரணம் கதையில் வரும். நட்ராஜ் மகராஜில் இருகைகளிலும் தன்னுடைய ஒவ்வொரு குழந்தையைப் பிடித்திருக்கும் பெண், கூட்டநெரிசலில் தன்மீது நிகழும் பாலியல் அத்துமீறலை ரசிப்பது. சாமியாத்தாவின் மணவினை தாண்டிய உறவை முதல்முறை தெரிந்து கொள்ளும் வேம்பனக் கவுண்டரின் மௌனம் என்று பாலியல் கதைகளின் போக்கை மாற்றும் சக்தியாகவும், கதையோட்டத்திற்கு அவசியமானதாகவும் அமைந்திருக்கும்.
கடைசி இரண்டு நாவல்கள் ஒரு சமூகம்/ஊரின் கதை. நொய்யலைப் பொறுத்த வகையில், என்னுடைய கருத்தின் படி இரண்டாயிரம் பக்கங்கள் எழுதப்பட வேண்டிய நாவல். முதல் இரண்டு நாவல்களில் நுட்பத்திற்கு அதிகமான கவனம் செலுத்தியதாகத் தோன்றுகிறது. நட்ராஜ் மகராஜ் தவிர்த்த மூன்று நாவல்களிலுமே நாவிதர் சமூகத்தைக் குறித்த வரலாறு அல்லது பல செய்திகள் கலந்திருக்கும். நான்கு நாவல்களிலுமே வட்டார மொழியை உபயோகித்திருந்தாலும், நொய்யல் நாவலில் அந்த நதிக்கதையின் கிராமத்தில் வாழ்ந்தவர்களின் பேச்சுமொழியை மும்முரமாகக் கையாண்டிருப்பதால், பரிட்சயமில்லாதவர்களுக்கு வாசிப்பில் சற்று சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.
இலக்கிய நுண்ணுணர்வும், நடுநிலைமையும் கொண்ட வாசகர்கள் தேவிபாரதியின் இலக்கிய இடம் குறித்து விசனப்படக்கூடும். ஆனால் இது தமிழில் எப்போதும் நேர்வது தான். காலமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இலக்கியமானி. அது முகங்களையோ, பிம்பங்களையோ பார்ப்பதில்லை. நல்லது காலத்தை எதிர்த்து நிற்கும் என்பதே விதி. அதன்படி தேவிபாரதியின் நாவல்கள் ஐம்பது வருடங்கள் கழித்தும் வாசிக்கப்படும்.