ஆசிரியர் குறிப்பு:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள காணக்கிளிய நல்லூர் இவரது ஊர். மனிதவளத்துறையில் பணிபுரிகிறார். இவரது கதைகள் பல இணைய இதழ்களில் வெளியாகி உள்ளன. இது இவருடைய முதல் தொகுப்பு.

சங்கரநாராயணின் கதைகள் பெண்களின் உலகத்தால் நிரம்பியிருக்கின்றன. நல்லவர்கள், கெட்டவர்கள், அப்பாவிகள், அபலைகள் என்று எந்த சட்டகத்துக்குள்ளும் அடைக்க முடியாத பெண்கள் என்பது குறிப்பித்தக்க விஷயம். ஆனால் இவரது கதைகளில் வரும் ஆண்களை அப்படிச் சொல்ல முடியாது. சில கதைகளுக்கு Open ending வைத்திருக்கிறார். முதல் தொகுப்பிலேயே இது போன்ற கதைகள் இடம்பெறுவதும் முக்கியமான விஷயம்.

‘மன்னிப்பு’ கதை தொகுப்பில் எனக்குப் பிடித்த கதை. Traditional கதையென்று பெரிதாக அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லையென்றலும் அவனது உணர்வுகளை அப்படியே புரிந்து கொள்ள முடிகிறது. நவீன சிறுகதைகளில் அது ஒரு இன்றியமையாத விஷயம். ஏதோ ஒரு வகையில் இவனுக்கும் கடைசிக் கதை ‘ரகசிய அற்புதம்’ கதைசொல்லிக்கும் ஒரு தொடர்பு இருப்பது போல் தோன்றுகிறது.

‘பெண் தெய்வம்’ தொகுப்பில் தனித்து, வித்தியாசப்பட்டு நிற்கும் கதை. அந்தக் கதையில் சொல்ல வருவதைச் சொல்வதற்கு அமானுஷ்யத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதும் நல்ல யுத்தி. உண்மையில் அது கதையின் அழுத்தத்தைக் கூட்டியிருக்கின்றது. அந்தக் கதையில் இது சாத்தியமா என்று யாரும் கேள்வி கேட்க முடியாது. அடுத்து ‘தரிசனம்’ கதையை எடுத்துக் கொள்ளலாம். விட்டேற்றியாகச் சொல்லாமல் மனங்கனிந்து ஆறுதல், நல்வாக்கு சொல்பவர்கள் யாரென்றாலும் கேட்பவர் மனதில் தெய்வவாக்கைப் போல் நினைக்க வைக்கிறார்கள். அது Ok. ஆனால் கணவன் வீட்டில் இவளை ஒரேயடியாகக் கழித்துக்கட்டி விட்டார்கள். எல்லாமும் தெரிந்த பழைய காதலன் உறுதுணையாக இருக்கிறான். இப்போது நந்தினிக்குக் குழந்தை வேண்டும், காதலனை மணம்செய்ய வேண்டும், அதற்கு விவாகரத்து வேண்டும் என்பது கவலை என்று வந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அதே போல் விவாகரத்து வழக்கை எடுத்தவுடன் சுப்ரீம் கோர்ட் கொண்டு செல்ல முடியாது. Family court, High Court என்று இடையில் சில நிறுவனங்களும், பல வருடங்களும் இருக்கின்றன. கதை தானே என்று Modern short storiesல் சொல்ல முடியாது. சுப்ரிம் கோர்ட் செல்லும் ஒரு வழக்கறிஞர் இதைப் படித்தால்?

சங்கரநாராயணின் இன்னொரு ப்ளஸ் வார்த்தை சிக்கனம். பல கதைகளில் அது வெளிப்பட்டாலும், அம்மா சொல்லாத கதையில் அது இன்னும் அழகாக வந்திருக்கிறது. சாதாரண கதைகளும் தொகுப்பில் இருக்கின்றன. Over all, நம்பிக்கையூட்டும் எழுத்து, கொஞ்சம் மெனக்கெட்டால் இவரால் நல்ல
கதைகளைத் தொடர்ந்து எழுத முடியும்.

பிரதிக்கு:

சால்ட் பதிப்பகம் 89394 09893
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 150.

Leave a comment