ஆசிரியர் குறிப்பு:

தஞ்சையில் பிறந்தவர். சென்னையில் வசிப்பவர். முதுகலை நுண்ணறிவியல் பயின்றவர். ‘யாவுமே உன் சாயல்’,
‘ ஏவாளின் பற்கள்’ ஆகியவை இவரது முந்தைய கவிதைத் தொகுப்புகள். இது மூன்றாவது கவிதைத் தொகுப்பு.

காயத்ரியின் கவிதைகளின் மொழி ஒரு விடாமுயற்சி கொண்ட பெண்ணின் மொழி.
அரைமணி நேரம் சமாதானப்படுத்துவதை, மறுவார்த்தை பேசாது கேட்டுக் கொண்டிருந்து விட்டுக் கடைசியில் “இல்லை போகக்கூடாது ” என்று சொல்லும் பெண்ணின் முகபாவம்.

” பச்சிளம் சிசுவென
உறங்க வைத்து
விலகத் துணியாதே
பிரிவின் முன் பழக்கி விட்டுப் போ
நிறைசூலியாயிருந்தும்
சடலத்தைப் பார்க்கவென
நெடுந்தூரம் பயணித்தவள் நான்
தொலைதனினும் மரித்தல் நலம்”

தாங்க முடியாத வலி என்று கண்ணீர்முட்டச் சொல்லும் மகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத கையறுநிலை ஆண்களுக்கு. கைமாற்ற முடியும் என்றால் வாங்கிக் கொண்டிருந்திருப்பேன்.

” முழங்கால் தொட்டு
கெண்டைக்கால் கணுக்கால் வழி
உள்ளங்கால் பாதம்
விரல்கள் வரைக் கடுக்கும் நாளொன்றில்
தோன்றும் இறையிடம்
வலியமர்த்தும் வரம் கேட்பேன்
விடாய்தோறும்
என் மகளுக்காவது”

பொருட்கள் என்பது அதில் படிந்த நிகழ்வுகள். அப்பாவின் வாசம் போய் பலகாலம் ஆன சட்டையைத் தொடுவதற்கு முன், விரல்களில் சிறுதயக்கம். அம்மாவைத் தொட்டுப் பேசியது போல் அப்பாவிடம் ஏன் செய்ததில்லை?

” ஒவ்வொரு முறை
திருகாணி கழற்றும் போதும்
சில்லிடுகின்றன விரல்கள்
குளிர்பெட்டியில் வைக்காமலேயே
சில்லிட்டுப் போயிருந்த
சித்தியின் காதுகளிலிருந்த
தோட்டைக் கழற்றும் போது
நிகழ்ந்ததைப் போலவே”

புத்தகங்களில் கோடிடுதல், பக்கத்தை மடித்தல், பாதிபடித்த புத்தகத்தின் மேலட்டை கால்பரப்பிக் கொண்டிருத்தலைப் போன்ற தோற்றம் எதுவுமே எனக்குப் பிடிப்பதில்லை.
புத்தக விமர்சனங்களிலும் பெண்களை வலுக்கட்டாயமாக உள்ளே இழுக்கிறேன் என்று சொன்னவர்கள் பாருங்கள், இதை எழுதியவர் ஒரு பெண்.

” பிடித்த வரிகளுள்ள பக்கங்களின் காதுகளை மடித்துக் கொண்டே வரும்பொழுது பருத்து விடுகிறது
பூரிப்பில் பருத்திடும் பெண்மையாய்”

காயத்ரியின் பல கவிதைகள் இத்தொகுப்பில் அதீத காதலும், பிரிவின் சோகமும் பேசுகின்றன. கடலின் மேலிருக்கும் காதல் சில கவிதைகளில் தெரிகிறது. பால்யத்திற்குச் சென்று வருவது, அல்லது பால்யத்தில் இருந்தவைகள் தொலைந்து போனது குறித்து சில கவிதைகள். அங்கங்கே வாழ்க்கையை ஆச்சரியமாக உற்றுப் பார்க்கும் குழந்தைப் பார்வையும்.

முதல் தொகுப்பில் இருந்த அதே காதலும், வேகமும் மூன்றாம் தொகுப்பிலும் சூடு குறையாமல் அப்படியே இருக்கின்றன. மிகை உணர்ச்சிகளில் நாடகபாணி கலக்காது நம்மையும் சேர்த்து Empathize செய்யவைப்பதே காயத்ரியின் பலம். நூற்றுக்கும் மேலிருக்கும் கவிதைகள் கொண்ட தொகுப்பு. எண்ணிக்கை என்பது பிரச்சனையில்லை. சில கவிதைகளைத் தொகுப்பிற்குத் தவிர்த்திருக்கலாம். கவிஞர்கள் பெரும்பாலானவர்கள் தாய்ப்பாசத்துடன் அனைத்து குழந்தைகளையும் ஒன்றே போல் ஆதரிக்கும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பது தான் சிக்கல் என்று நினைக்கிறேன். காலமெல்லாம் அகிம்சையைப் போதித்த காந்தியே கருணைக்கொலைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து தொகுப்புகள் வர வாழ்த்துகள்.

பிரதிக்கு:

வாசகசாலை 97904 43979
முதல்பதிப்பு டிசம்பர் 2022
விலை ரூ. 150.

Leave a comment