Misogynists, அதாவது பெண் வெறுப்பாளர்களுக்கு பெரும்பாலான சமயங்களில் அவர்களது ஆழ்மனதில் பெண்களை வெறுக்கிறார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியாது. தாய், மனைவி, சகோதரி, தோழி, மகள் எந்த உறவாக இருந்த போதிலும் அவர்கள் இவர்களுக்கு நிகரானவர்கள் இல்லை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். எதையுமே பொதுமைப்படுத்த முடியாது என்றாலும், அறுதிப் பெரும்பான்மை இப்படியே இருப்பார்கள் என்று சொல்லலாம்.
இவர்கள் ஒரு உறவின் தொடக்கத்தில் மற்ற ஆண்களை விட அதிகமாகப் பெண்களைக் கவரும் வகையில் நடந்து கொள்வார்கள். கனவான்களின் மேல் மழைபெய்து சாயம் வெளுக்கையில், பெண்கள் தாங்கள் பலமாக ஏமாற்றப்பட்டதை உணர்வார்கள். இன்னொரு வகையினர் மற்ற ஆண்களை விடத் தாம் அறிவாளி என்ற பிம்பத்தை மீனுக்கு வலையை வீசுவது போல் பொதுவெளியில் வீசுவார்கள். அறிவுஜோதியில் கலக்க ஆசைப்படும் பெண்கள் அதில் போய் சிக்கிக் கொள்வார்கள்.
இப்போது முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு அசல் பெண்வெறுப்பாளனால் எந்த உறவிலும் அவன் சுயரூபத்தைக் காட்டாமல் இருக்க முடியாது. எந்தப் பெண்ணின் வெற்றியையும் அவனால் மனதார ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் மறுபாலினத்திடம் நீண்டகால உறவு என்பதே இவர்களுக்கு சாத்தியமில்லை. மனைவியை அனுசரித்து (இரும்மா நான் செய்வேன்ல) வாழும் எவனுமே பெண்வெறுப்பாளன் இல்லை. வெளியுலகில், Womenlibல் தீவிரமாக இயங்கி, ஆண் என்பவனே கெட்டவன் என்று கற்பிக்கும் நங்கையருக்கு, சாந்தமும், சாத்வீகமும் நிறைந்த கணவர்கள் தவறாது இருப்பது போல, இவர்களுக்கும் அன்பே உருவான மனைவி அமைந்திருப்பதால், அவளை விட்டுவிட்டு வேறு பெண்களின் மேல் வெறுப்பைக் காட்டுவார்கள். அசல் பெண் வெறுப்பாளன் என்ற பட்டத்தைக்கூட இவர்களுக்குக் கொடுக்க முடியாத போலிகள். ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? ஒவ்வொருவருக்கும் ஒரு Hidden agenda இருக்கும்.
என்னிடம் நெருங்கிப் பழகிய ஒவ்வொரு பெண்ணுமே தவறாமல் சொல்லியது எனக்குப் புத்தகங்கள் போதும், வேறு உறவே தேவையில்லை என்று. அவர்களுக்குத் தெரியாதது பெண்கள் இல்லை என்றால் நான் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்பது. ஆண்கள் மட்டும் இருக்கும் உலகில் வாழ்ந்து என்ன சாதிக்க? Sex என்பதை வைத்து மட்டும் இதைச் சொல்லவில்லை, எல்லா உறவுகளிலுமே ஒரு முழுமையை அவர்களே எனக்களித்தது. என்னைச் சூழ்ந்து அவர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமே, என்னை என்போக்கில் செலுத்தியது என்று கூட கூறலாம். பெண்களில்லாது பூரணத்துவம் என்பதே என் வாழ்க்கையில் இல்லை.