வரலாறு எப்போதுமே எந்தக் கண்ணாடியை அணிந்து பார்க்கிறோமோ அதற்கேற்ப, நிகழ்வை யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக்குவது. ஜப்பான் மேல் அமெரிக்கா ஈவிரக்கமில்லாது குண்டுகள் போட்டது என்பதில் அவர்கள் மேலிருந்த பரிதாபம், பின்னர் சீன இலக்கியங்கள், சிங்கப்பூரில் அவர்கள் செய்த கொடுமைகளைப் படித்த பிறகு குறைய ஆரம்பித்தது. இந்த நூல் மற்றுமொரு கொடுமையை எடுத்துச் சொல்கிறது. கிட்டத்தட்ட இரண்டுலட்சம் பெண்கள் ஜப்பானிய ராணுவவீரர்களுக்குப் பாலியல் அடிமைகளாகப் பணியாற்றியிருக்கிறார்கள். Comfort woman என்பது நாகரீகமான சொற்பிரயோகம். மரியா பாலியல் அடிமையான போது அவர் வயது பதினாறு. இரண்டாம் உலகப்போரின் போது நடந்த இந்தக் கொடூரத்தை முதன்முதலாக வெளிக்கொணர்ந்தவர் மரியா.

நாஸிகளைப் போலவே சரணடையும் முன் இதுகுறித்த எல்லா ஆவணங்களையும் ஜப்பானிய ராணுவம் அழித்து விடுகிறது. பின்னர் போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கையில் கிட்டத்தட்ட நானூறு Comfort stations இயங்கியதாகச் சொல்லப்படுகிறது. கொரியா, தைவான், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், சீனா, மலேயா ஆகிய நாடுகளில் இருந்து பெண்கள் கொண்டு செல்லப்பட்டனர். சீனாவில் ஜப்பானிய வீரர்களால், குடும்பப்பெண்கள் மேல் நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறல்கள் உலகளவில் பேசப்பட்டதும், அது போன்ற நிகழ்வுகளைக் குறைக்க, வீரர்களுக்கு நோய் தொற்றாது பாதுகாக்க என்பது போன்ற காரணங்களுக்காக ராணுவமே நடத்திய விபச்சார விடுதிகள் இவை.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஜப்பானில் நல்ல வேலைவாய்ப்பு என்று பொய் வாக்குறுதிகளை நம்பி சென்ற பெண்கள் இவர்கள். பிலிப்பைன்ஸில் கொரில்லாக்களைப் பிடிக்க என்று படையினர் தூக்கிச் சென்ற பெண்களும் உண்டு. இப்பெண்களின் சராசரி வயது 17. அதிகாரபூர்வமாக இருந்ததில் வயது குறைந்த பெண்ணின் வயது 10. ஒரு பெண் நாளொன்றுக்கு, ஐந்தில் இருந்து பத்து வீரர்களை திருப்தி செய்ய வேண்டும். அதற்கு பணம் எதுவும் கிடையாது. சமையல் செய்வது, சுத்தப்படுத்துதல் மற்றும் இதரவேலைகளை ஓய்வுநேரத்தில் பார்க்க வேண்டும்.

மரியாவின் தாய் ஜுலியா சிறுவயதிலேயே குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் செல்கிறாள். காலையும், மாலையும் தேவாலயத்திற்குச் செல்லும் Devoted Christianஆன, ஜூலியாவின் தாத்தா வயதுள்ள, Don Pope ஏன் ஜூலியாவை பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும்? இது எப்போதும் அப்படித்தான், கடவுளை நம்பாதவர்களுக்கு Conscious என்பது பெரிது, கடவுளை நம்புபவர்கள் கொலைகூட செய்து விட்டு மண்டியிட்டுக் கடவுளே என்னை மன்னித்துவிடு என்று கதறி அழலாம். ஆண்டவர் அவர்கள் பாவங்களை வாங்கிக் கொள்வார். ஆனால் ஜூலியாலின் தாயும் பணத்திற்காக நீ இணங்கித்தான் ஆக வேண்டும் என்பதே இங்கு கொடுமையான விஷயம். Don Popeக்கு முறையில்லாமல் பிறந்தவரே மரியா.

மரியா பிலிப்பைன்ஸ் கொரில்லாக்களுக்கு
மருந்து, உணவு, ஆயுதம் கொண்டு செல்ல உதவுகிறாள். ஒருநாளில் ஜப்பானிய வீரர்களால் பிடிக்கப்பட்டு, Comfort woman ஆகிறாள். முதல்நாள் அவளிடம் இருபத்திநாலு ஜப்பானிய வீரர்கள் வல்லுறவு கொள்கிறார்கள். அப்போது மரியாவுக்கு வயது பதினாறு. இன்னும் பருவம் எய்தவில்லை. அதனால் ஜப்பானியருக்கு அனுகூலம் என்னவென்றால் மற்ற பெண்களுக்கு அளிக்கும், நான்கைந்து நாட்கள் மாதாந்திர விடுமுறையை மரியாவிற்கு தர வேண்டியதில்லை.

ஆங்கிலேயர்கள் நைஜீரியாவில் ஒரு கிராமத்தைத் தீயீட்டு எல்லோரையும் கொன்றது போலவே, ஜப்பானியர்கள் கிராமம் முழுதையும் கொரில்லாக்கள் இருப்பார்கள் என்ற சந்தேகத்தில் தீக்கிரையாக்குகிறார்கள். கூடுதலாக இயந்திரத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, தீயில் தப்பிப்பவர்களைச் சுடுகிறார்கள்.

ஒன்பது மாதங்கள், மரியா பாலியல் அடிமையாக இருந்திருக்கிறார். அதற்குள் ஆயிரக்கணக்கான ஜப்பானிய வீரர்கள் அவர் உடலை உபயோகித்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாது, அவர்கள் திருப்தி ஏற்படாத போது, செயல்பட முடியாமல் போகும் போது அடி, உதை, தலைமுடியைப் பிடித்து சுவற்றில் மோதுதல், பட்டினி போடுதல் போன்ற கொடுமைகளும் அரங்கேறியிருக்கின்றன.

ஒருமுறை எதிர்பாராத பாலியல் வல்லுறவு நடந்தாலே Nightmares வாழ்க்கை முழுதும் இருக்கிறது என்று பெண்கள் சொல்லி இருக்கிறார்கள். இது போன்று நடந்த பெண் அதில் இருந்து மீண்டுவர எவ்வளவு மனத்திடம் வேண்டியிருக்கும்? மணவாழ்க்கையிலும் இவருக்கு ஏமாற்றம். முப்பத்தி நான்கு வருடங்கள் ஒரு புகையிலைக் கம்பெனியில் Sweeper ஆக வேலை பார்த்து, கடைசி நாட்களில் தைரியமாக முன்வந்து தனக்கு நடந்த அநீதியை பொதுவில் வைத்திருக்கிறார். பின் பல பெண்கள் தைரியமாக இவரைப் பின் தொடர்ந்திருக்கிறார்கள். இவரது மகளிடம் நான் வெளியே நடந்ததைச் சொல்லலாமா என்று கேட்டதற்கு மகளின் மறுமொழி ” அம்மா உன்னை நான் மிகவும் விரும்புகிறேன். உனது கடந்தகாலம் எவ்வளவு இருண்மையாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை”. இவர் வெளியே சொன்னபிறகு இவரது பதினான்கு வயதுப் பேத்தியிடம் அண்டைவீட்டார் சொன்னது
” உன் பாட்டி நல்ல பலசாலி தான், ஒரு படையையே சமாளித்திருக்கிறார்”.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s