இலங்கை பயணம் முடிவானதும் கூகுள் பயணத்திட்டம் சரிவராததால், நண்பர்களின் உதவியை நாட வேண்டியதாயிற்று. ரிஷான் ஷெரீப் நீண்ட பயணத்திட்டம், உடைகள், மற்ற விஷயங்களைப் பற்றிய நெடுங்குறிப்புகள் அனுப்பியிருந்தார். அருண் அம்பலவாணர் ஒரு நெடிய பயணத்திட்டத்தை அனுப்பியிருந்தார். உட்பெட்டியில் பலர் தொடர்பு கொண்டு அது சிறப்பான பயணத்திட்டம் என்று உறுதி செய்தார்கள். அய்யாத்துரை சாந்தன், எம்.எம்.நௌஷாத், தமிழ்நதி, உமா வரதராஜன் உள்ளிட்டுப் பலர் பயணத்திட்டங்களை அளித்தனர். முதலாவதாக யாழ்பாணத்திற்கு பெங்களூரில் இருந்து நேரடி விமானப் போக்குவரத்து கிடையாது. கொழும்புசெல்லும் விமானம் கூட அகாலத்தில் போய் இறங்கும். சென்னை சென்று விட்டு உறவுகளைப் பார்க்காது சென்றால் அது ஒரு பிரச்சனை. உடன் வருபவருக்கேற்ற பயணத்திட்டம் தயாரானது. நான் தனியாக வந்திருந்தால் ஒரு கோயிலுக்கும் சென்றிருக்க மாட்டேன், இன்னும் நிறைய நண்பர்களைச் சந்தித்திருப்பேன். ஆடு மேய்க்கும் வேளையில் அண்ணனுக்குப் பெண் பார்ப்பதே நான் இப்போது செய்வது.

பொலனறுவை சிதிலங்களின் நகரம். விஜயபாகு, பராக்கிரமபாகு போன்ற புகழ்பெற்ற மன்னர்கள் ஆண்ட சாம்ராஜ்யம். இப்போது தமிழர்கள் இவர்களை விஜயன், பராக்கிரமன் என்ற இந்து மன்னர்கள் என்கிறார்கள். எல்லாக் கட்டிடங்களும் செங்கல் கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன. கருங்கல் கட்டிடம் எதுவுமேயில்லை. பதினாறு இந்துக் கோயில்கள், பல புத்தவிஹார்கள் எல்லாமே சிதிலமடைந்திருக்கின்றன. இரண்டாம் சிவாலயம், வானவன் மாதேவி பெயர் சூட்டப்பட்டது மட்டுமே அர்ச்சகர், பூஜையுடன் வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. இரண்டாம் சிவாலயத்தில் முழு சிதிலங்களின் நடுவே லிங்கம் நின்று கொண்டிருக்கிறது. பராக்ரமபாகுவின் ஆயிரம் அறைகள் கொண்ட ஏழுமாடி அரண்மனை முழுதும் அழிந்து இருக்கிறது. சிதிலங்களுக்கிடையே இப்போது மூன்று மாடி இருந்ததற்கான அத்தாட்சி மட்டுமே இருக்கின்றது. இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள் பொலனறுவையைத் தவற விடாதீர்கள். நிலையாமைத் தத்துவத்தைச் சொல்லும் நகரம். முன்னர் சிங்களவர்களின் இரண்டாம் தலைநகர். சோழர்கள் படையெடுத்து வந்து விஹார்களை அழித்தனர். பின் போர்த்துகீசியர்களும், சிங்களவர்களும் சிவாலயங்களை அழித்தனர். கடைசியில் எஞ்சியது இருவருக்கும் செங்கல் இடிபாடுகள். மாறும் உலகில் மாறா இளமையைத் தக்க வைப்பதென்பது நீலவானம் தேவிகாவிற்கு மட்டுமே சாத்தியம்.

Leave a comment