“தி.ஜாவின் முதல் நாவல் எது? ” தமிழ்நதி என்னுடன் நடத்திய முதல் உரையாடல் இது.
தமிழ் எழுத்தாளருக்கு எல்லாமே தெரிந்திருக்குமே, இவர் நம்மைக் கேட்கிறாரே என்ற ஆச்சரியத்துடன் ஆரம்பித்தது எங்கள் நட்பு. இந்த ஐந்து வருடங்களில் A-4 sheetல் எழுதினால் இரண்டு பக்கங்கள் பேசியிருப்போமா என்பதே சந்தேகம். இவ்வளவிற்கும், வணக்கம், பிஸியா போன்ற ஆரம்ப ஆலாபனைகள் இல்லாமல் எந்த விஷயம் குறித்தும் இவரிடம் நான் பேசலாம்.

இலங்கைப் பயணம் முடிவுசெய்யும் முன் இவரிடம் கேட்டதும், ஏப்ரல் நான்காம் தேதிக்கு சென்னை திரும்புவதாகவும், அவர் இல்லாவிட்டாலும் வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாகவும் கூறியவர் கடைசியில் செல்லவில்லை. சின்னச்சின்ன விஷயங்களைக் கூடப் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்ததில் இருந்து, இவனாகப் பேசமாட்டான் என்று ஒரு தமக்கையைப் போல் (வயது என்னைவிடக் குறைவு தான், அதில் சந்தேகம் வேண்டாம்) தொடர்ந்து பேச ஆரம்பித்து விட்டார். இன்றிலிருந்து அடுத்த நான்கு நாட்கள் தமிழ்நதியுடன்.

வவுனியாவில் நெல்குளத்தில் இருந்து பாவக்குளம் செல்லும் வழியில் பல ஆளில்லாத வீடுகள். பாவக்குளம், பராக்கிரமபாகு சமுத்திரத்திற்கு அடுத்த இரண்டாவது பெரிய குளம். ஏராளமான விவசாய பூமி இதை நம்பி இருக்கின்றது. பாவக்குளம் போன்ற ஏகாந்தமான இடத்தில் மருந்துக்குக்கூட ஒரு காதலரும் இல்லை என்பது ஆச்சரியத்திற்கும், வேதனைக்கும் உரிய விஷயம். நடந்து முடிந்த காதல்களுக்கும், நடக்கப் போகும் காதலுக்குமிடைப்பட்ட காலத்தில் நாங்கள் சென்றிருக்கலாம் பாவக்குளம் தாண்டிச் சென்றால் உள்குளம். தமிழர் குடும்பங்கள் பெரும்பான்மை வாழ்ந்த வீடுகளில் அடுத்த கிராமத்தில் இருந்து வந்த சிங்களவர்கள் பலரை வெட்டிக் கொன்றதால், வீடுகள் இருந்த தடயங்கள் அழிந்து புதர் மண்டியிருக்கின்றது. இதுவரையான பயணம் முழுதும் சிங்களவர்களே முன்வந்து எங்களிடம் இனிமையாகப் பேசியது. அந்த சிங்களவர்களும் இவர்களும் வேறு என்று நம்புவதில் ஒரு ஆசுவாசம் இருக்கிறது.

Leave a comment