சிறார் பருவத்திற்கும் பெரியவர் ஆவதற்கும் இடைப்பட்ட பருவம் சந்தேகங்களால் நிரம்பியது. சந்தேகங்கள் வேறாயினும், சந்தேகப்படுதல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. சிறுவர்கள் தங்களால் முடியாது போகுமோ என்ற அச்சத்தை, அவனை விரும்பும் பெண்கள் குறித்தான கற்பனைக்கதைகளை நண்பர்களிடம் சொல்லிக் கடக்க முயல்வார்கள். இந்தக் கதை அந்த வயதில் இருக்கும் பெண்ணின் பயங்கள் குறித்தது.
பெண்மை நிறைந்த கதைகள் என்று யாரேனும் பேசினால் உடன் நினைவுக்கு வருவது Red Dress story. பெண் எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய கதை. தமிழில் இது போல பல பகுதிகள் யாராலும் தொடப்படாது இருக்கின்றன. Munro ஏன் ஒரு Master என்பதற்கு இது போல அவரது பத்து கதைகள் போதும்.
சுயசரிதைக்கூறு நிரம்பிய கதை இது. கதைசொல்லிக்குப் பெயரிடப்படாததற்கு கதையில் வலுவான காரணம் இருக்கின்றது. இருபது பேர் இருக்கும் இடத்தில் நம் குரலில் கீறல் விழுவது, எல்லோர் கவனத்தையும் நம்பக்கம் ஈர்க்கும் செயல்களைத் தவிர்ப்பது என்பது Common trait..
பெண்ணுடலை பதிமூன்றுவயது சிறுமி புரிந்து கொள்ள முயல்கிறாள். இந்தக் கதையில் பல இடங்களிலும் பெண்ணுடலின் நுட்பங்கள் சிதறிக் கிடக்கின்றன. அது மட்டுமல்ல, அந்த வயதில் பெண்கள் தாயாரை வெறுப்பது, அவளை இடைஞ்சலாக நினைப்பது அழுத்தமாகப் பதிவாகி இருக்கின்றன. Munroவின் புகழ்பெற்ற கதைகளில் இதுவும் ஒன்று.
தினத்தந்தி பாலத்தில் இறங்கி நடக்கிறேன். இருபத்தைந்து வயதாகியும் ஆசைப்பட்ட வங்கி வேலை கிடைக்கவில்லை. பைக்கில் கர்வமான ஆண்களின் பின்னால் ஒயிலாகச் சாய்ந்த பெண்கள். எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையவே போவதில்லை என்ற வருத்தத்தை விழுங்கித் தொடர்ந்து நடக்கிறேன்.