1992 – விஜயகுமார்:

1992 இரண்டு நிதர்சனங்களை இணைக்கும் மையஇழை. முதலாவது அம்மா-மகள் உறவை விட மகன் வளர்ந்ததும் அதிகமாகப் பாதிக்கப்படுவது அப்பா-மகன் உறவு. அப்பா செய்வதெல்லாம் தவறு என்ற மகனின் அபிப்ராயமும், மகன் புத்திசொல்லும் அளவிற்கு தனக்குப் போதாமலில்லை என்ற அப்பாவின் கருத்தும் சதா மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கும். இரண்டாவது விவசாயிகளுக்கு லாபநட்டக் கணக்கை விட மண்ணில் காலத்தைக் கடத்துவதே ஏற்புடையது, வெளியிருந்து பார்ப்போருக்கு முட்டாள்தனமாக இருந்தால் கூட. இந்த இரண்டையும் இணைக்கும் நல்ல கதை இது. அண்ணன் -தங்கை உரையாடல்கள் அருமை.

அந்தம் – ஹேமா:

ஹேமாவிடமிருந்து மீண்டும் வரலாற்றுப் பின்னணியில் ஒரு கதை. ஜப்பானியரிடம் சிறைப்பட்டு காணாமல் போன எண்ணற்ற குடும்பங்களில் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. இன்னொரு வகையில் இது முழுமையான Halloween சிறுகதை. Halloween கொண்டாடப்படும் நேரத்திலேயே வந்திருக்கிறது.

Red Sorghum போன்ற நாவலைப் படித்தவர்கள் இந்தக் கதையின் வரலாற்றுப் பின்னணியை நன்கு அறிவார்கள். ஜப்பானின் அட்டூழியங்கள் இரண்டு அணுகுண்டுகளால் மூடப்பட்டு எல்லோருடைய பரிதாபத்தையும் சம்பாதித்துக் கொண்டன.

முடிவில்லாத ஒரு காத்திருப்பை, அருமையான மொழிநடையில் சொல்லி இருக்கிறார் ஹேமா. சீனர்கள் நடத்தும் நீத்தார் சடங்கு குறித்து ஏராளமான தகவல்கள். Hallucinationஆ Mind Voiceஆ அல்லது இரண்டுக்கும் இடையிலா, கதைக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.
நான் வாசித்தவகையில் ஹேமாவின் சிறந்த கதையிது. நல்ல potential கொண்ட, கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் ஹேமா.

அசைவும் பெருக்கும் – ஜெகதீச குமார்:

தியானத்தையும், கர்மயோகத்தையும் பற்றிய கதை. கங்கைக்கரையைக் கதை நிகழும் இடமாகக் கொண்ட கதை. மொழிநடையும், கட்டுக்கடங்காது குரங்கு போல் தாவும் மனத்தைக் கட்டுப்படுத்த நடக்கும் உரையாடல்களும் நன்றாக வந்திருக்கின்றன. ஒருசிறுகதையை மீண்டும் மீண்டும் படித்து எடிட் செய்யாமல் வெளியே விடக்கூடாது. கௌதம் மனதைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் வேறு எதிலும் ஈடுபடப்போவதில்லை என்று முதலில் உறுதியாக குருவிடம் சொல்லிப்பின் நண்பனின் உதவிக்காக அமெரிக்கா செல்வதாகக் கூறுகிறான். குருவிடம் கர்மயோகம் குறித்தும், விரும்பியதைச் செய்யக் கண்ணன் சொல்லியதையும் கேட்டபின், முதலில் முடியாது என்ற வேலையை இப்போது செய்தால் கதை அழுத்தமாக இருந்திருக்கும். இரண்டாவது காமம் படுத்துவது. மென்பொருள் நிரல் வித்தகனுக்கு பணத்திற்கோ, பெண்களுக்கோ இந்த Free sex யுகத்தில் பஞ்சம் இருக்குமா?.அதற்காக மனம் அலைபாயுமா? நல்ல சிறுகதைகள் Deadlineஐயோ தன்னை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்ற தீராத ஆவலையோ தாண்டி, தன்னுடைய ஜனன நேரத்தைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்பவை.

ஊர்த்துவ தாண்டவம் – ஜி.எஸ்.எஸ். நவீன்:

அதிகம் வெளியில் தெரியாத கணியான் பாட்டும், கூத்தும். பாட்டின் வழியே முப்படாதியும் பொம்மியும் உயிர் பெறுகிறார்கள். ஆட்டத்தின் வேகத்தில் அவர்கள் சிவனும் தாட்சாயிணியுமாகிறார்கள். பரிபூரணத்தை அடைய நடத்திய தாண்டவம்.

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்செயம் என்றாட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட என்பது பந்து விளையாட்டுக்கு தாளஜதியோடு எழுதப்பட்ட குறவஞ்சிப் பாடல். தமிழ் அழகு. அந்த அழகை இந்தக் கூத்துக்கு தன் மொழிநடையில் கொண்டு வந்திருக்கிறார் நவீன். வார்த்தைகள், வரிகள் கூத்தாடுகின்றன. தாண்டவத்தின் உச்சமாக சக்தி வணக்கம். ஒவ்வொரு கதையிலும் வளர்ச்சியைக் காட்டிக் கொண்டே இருக்கிறார் நவீன்.

சாயம் – தாட்சாயணி:

நினைவும் நடப்பும் மாறிமாறி வரும் கதை.
Episodic Memory இந்தக் கதையில் அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தங்கள் முடியில் கர்வம் கொண்ட பெண்கள் மனமுவந்து அதை இழப்பது, சேர்ந்து மகிழ்ந்திருந்த பொழுதுகள், விசாரணைக்கு அழைத்துப் போனவன் திரும்பிவராதது என்று மனத்திரையில் தெளிவாக, யாருக்கும் தெரியாமல் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கிறது. விபத்து நடந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இடத்தை மீண்டும் கடக்கையில் உடலில் ஏற்படும் அதே குலுக்கலை உமாராணிக்கு கனத்த சிங்களக்குரல்கள் ஏற்படுத்துகின்றன. நினைவுகள் ஒரு சிறை, மரணம் மட்டுமே அவற்றிலிருந்து விடுதலை.

சிருஷ்டியுலகம் – சப்னாஸ் ஹாசிம்:

இஸ்லாமியச் சூழலில் இலங்கை இஸ்லாமிய வட்டார வழக்கில் கதைகள் எழுதுபவர் ஹாசிம். பாட்டியைத் தவிர யாருமற்ற அநாதையான ஆட்டிஸக் குழந்தையைப் பற்றிய கதை. மனநிலை வளராவிட்டாலும் உடல் வளர்ந்து விடுகிறது. மனமுதிர்ச்சி இல்லாதவர்களிடமும் பெண்ணுடலைத் தேடும் ஆண்கள் நிறைந்த சமூகம். சைபுதீன் கதவை சாத்திக் கொள்கையில் கதையும் முடிந்து விடுகிறது. இரண்டு நிகழ்வுகள் அவசரகதியில் நடப்பதால் பின்னதில் ஒரு செயற்கைத் தன்மை சேர்ந்து விடுகிறது. இல்லை, அந்தக்காலத்தைப் போல கெட்டுப்போன பெண்ணை உயிருடன் விடக்கூடாது என்ற சிந்தனையா? கதையை எங்கே முடிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வதன் மூலமும் சில நல்ல கதைகளைத் தரமுடியும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s