ஆசிரியர் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் வசிக்கும் இவர், புகைப்படக் கலைஞர், செய்தியாளர். இவரது ஏற்கனவே வெளிவந்த கவிதைத் தொகுப்புகள், கண்டராதித்தன் கவிதைகள், சீதமண்டலம், திருச்சாழல்.

திருச்சாழல் தொகுப்பு வந்த பின்னரும் கூட ஏன் கண்டராதித்தன் பரவலாகப் பேசப்படவில்லை என்ற சிந்தனை எனக்கு வந்து போனதுண்டு. தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமலிருப்பது கண்டராதித்தன் போன்ற Calibre கொண்ட கவிஞர்கள் மீதும் அதிகவெளிச்சம் விழாமல் இருக்கவைப்பது ஆச்சரியம். தனித்துவமிக்க கவிதைகளை எழுதியவர்.

எந்தக்கூட்டத்திலும் சேரமுடியாமலிருப்பது இருப்பிற்கு பெரும் சுமை. ஆமை தலையை உள்ளுக்குள் இழுப்பது போல் ஓட்டுக்குள் பதுங்குபவர் எத்தனை பேர்! யாருடனும் எளிதாக இணைந்து கொள்ள முடிந்தவர்கள் பாக்கியவான்கள்.

” நான் எங்கெல்லாம்
இல்லாமலிருக்கிறேனோ
அங்கெல்லாம் ஒரு
புன்னகை அரும்புவதாகவும்
ஒரு மரம் அசைவதாகவும்
மேகங்கள்
குளிர்வதாகவும் சொல்கிறார்கள்
ஒவ்வொரு நாளும்
இந்த அந்தியின் அடிவானம்
இருளுக்குள் செல்லும்போது
அவர்களுக்காகவே
நானும் அதனுடன்
நழுவிச் சென்றுவிடுகிறேன்”

கலாச்சாரக்கூறுகள் கண்டராதித்தனின் கவிதைகளில் விரவிக் கிடக்கும். மரபின் சாயல் கொண்ட பல கவிதைகளை அவர் எழுதியதற்கும் அதுவே காரணமாக இருந்திருக்கும். படிமங்கள் மனத்திரையில் ஓவியம் தீட்டுகின்றன. அதோ அந்த முதியவர் குனிந்து நின்று வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

” பூங்காவின் அருகிருந்த
பாழடைந்த ஜட்காவை
அனுதாபத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்
முதியவர்.
ஜனங்கள் பரபரக்கும் வீதியில்
பிரேதத்தில் பழுப்பேறிய காலம்
ஜட்காவிற்காக
கொஞ்சநேரமாகக்
காத்திருக்கிறது”

கண்களால் பார்க்கும் புறக்காட்சிகளைச் செழுமையான மொழியில் சொன்னால் கவிதை உருவாகி விடுகிறது. நல்ல கவிதைகள் சிலவார்த்தைகளை கவிதைக்குள் மறைத்து வைத்து விடுகின்றன. ஏனென்ற கேள்வியை வாசகன் கேட்கையில் பூனை பையிலிருந்து வெளிவருவது போல் சொல்லாத சொற்கள் தலையெடுக்க ஆரம்பித்து விடுகின்றன.

” மத்தியானத்தில்
நீர் தளும்பாதிருக்கிற
குளத்தின் எதிரில்
நின்று கொண்டிருப்பவனுக்கு
குடத்தில் குளத்தைச் சேகரிக்கும்
பெண்ணின் மீது ஆவல்
பைய உருண்டு திரண்ட
அந்த ஆவல்
வண்ணத்திரட்சியான
நீர்குமிழின் மீது அமர்கிறது
ஒரு மீன்கொத்தி அந்த
மத்தியானத்தின் குளத்தில்
தளும்பாத தண்ணீரை
தளும்பும் ஆவலை
ஒரே கொத்தில்
கொத்திச் சென்றது.”

எழுதிய கவிதை நிறைவைத் தருவதற்கு வெகுவாகப் பிரயத்தனப்பட வேண்டியதாகிறது சிலருக்கு. அன்றன்று தோன்றியதை வரிகளை மடக்கிப்போட்டு கவிதையென உறுதியாக நம்பும் மனம் பலருக்கு.

” கவிதையொன்றை
எழுத முற்படும் போது
அதை விரும்பாது
தாளுக்கும்
எழுதுகோலுக்கிமிடையில்
இருந்த பறவை பறந்து செல்கிறது

நான் அந்தப்பறவையை
பிடித்துவிட்டேன்
ஆனால் அலறும் அதன் குரல்
வெகுதூரத்தில் கேட்கிறது”

படித்து முடித்தவுடன் பெரிய தாக்கம் ஏதுமின்றி புன்னகைத்து நகரும் கவிதைகளும் அல்ல, எத்தனை முறை படித்தாலும் முட்டுச் சந்தில் கொண்டு போய் நிறுத்தும் கவிதைகளுமில்லை கண்டராதித்தன் கவிதைகள். மரபின் சாயலில் ஒன்றிரண்டு கவிதைகள் மட்டும், மற்றவை மேலே வரும் பாணிக்கவிதைகள் என்று முந்தைய தொகுப்புகளில் இருந்து வித்தியாசமான தொகுப்பு இது.

காட்சிகள் விவரிப்போடு முடியாமல் கேள்விகளை ஏற்படுத்துகின்றன. முதியவர் ஏன் ஜட்காவை அனுதாபத்தோடு பார்க்க வேண்டும்? அவரைப் போல் வாழ்ந்து முடிந்து எதிர்காலம் இல்லாது போனதனாலா? இல்லை இதே போன்ற ஜட்காவில் பக்கத்தில் அமர்ந்து இவர் கன்னத்தில் காற்றில் முடிவந்து உரச, சிரித்துக்கொண்ட இளம்பெண்ணை நினைத்துக் கொண்டாரா? பரபரப்பாகக் கார்கள் ஓடும் சாலையில் ஜட்காவின் அடையாளமும் முதியவரின் அடையாளமும் ஒன்றா? அடுத்த கவிதையில் மீன்கொத்தி யார்?

கவிஞர்களுக்கென்று ஒரு சாயல் உண்டு, தொனி உண்டு ஆனால் கண்டராதித்தன் அதிலும் மாறுபடுகிறார். வள்ளலார் வருகிறார் என்ற கவிதைக்கும் திருவடிப்பேற்று வழிபாடு அழைப்பு என்ற கவிதைக்கும் தொனியில் எவ்வளவு வித்தியாசங்கள்? தனியாகப் பார்த்தால் இரண்டையும் எழுதியவர் ஒருவரென்று சொல்வது கடினம். அதுவே கண்டராதித்தனின் தனித்துவமும் கூட. இனிமையான வாசிப்பனுபவத்தை வழங்கும் தொகுப்பு.

பிரதிக்கு:

சால்ட் 89394 09893
விற்பனை உரிமை தமிழ்வெளி 90940 05600
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.130.

Leave a comment