ட்டி.டி.ராமகிருஷ்ணன் மலையாளத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர்.
இவரது சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி என்கின்ற நூல் மூலம் பரவலாக தமிழ்நாட்டில் அறியப்பட்டார். இலங்கையின்
ராஜனி ராஜசிங்கத்தின் கொலையை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் அது. ஆங்கிலேயர்கள் ஆப்பிரிக்காவில் ரயில்வே கட்டுமானப் பணிகளுக்காக கூட்டிச்சென்று, அங்கேயே தங்கிவிட்ட குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைப் பெண்ணாகிய தாரா
விஸ்வநாத் என்கின்ற பெண்ணின் கதை இது, கூடவே மனித இனத்தில் மற்றுமொரு கறைபடிந்த, உகாண்டா தினங்கள் குறித்த வரலாறு.

தாராவுடன் பேனா நண்பராக இருந்த, மனதுக்குள் அவளைக் காதலித்த மலையாள எழுத்தாளர், பல வருடங்களுக்குப் பிறகு தாராவின் மறைவிற்குப் பின் அவளது மகள் ஸோபியாவைச் சந்திப்பதும், மலையாளம் வாசிக்கத் தெரியாத அவள், அம்மாவின் கையெழுத்துப் பிரதிகளை இவரிடம் அளித்து, மலையாளத்தில் பிரசுரிக்க உதவியை நாடுவதும், நேர்காணல், கவிதைகள், மாதா ஆப்பிரிக்கா என்ற குறுநாவல், எழுத்தாணி என்ற சிறுகதை, ஒகாபியின் கதை, கறுப்பிற்கும் வெளுப்புக்குமிடையே என்ற தன்வரலாறின் இரண்டாம் பாகம் எல்லாமுள்ள அந்தக் கையெழுத்துப் பிரதிகளை
நாவல் வடிவில் கட்டமைப்பது போல அமைந்த நூல் இது.

தாரா கற்பனை பாத்திரம். ஆனால் இடிஅமீன், சாரா கொலாபா, கிஸங்கானியைச் சேர்ந்த லுமும்பா, மொபுடு போன்றவர்கள் உண்மையில் வாழ்ந்தவர்கள். கதை மொத்தமுமே ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. ஏற்கனவே ஆல்பா என்ற நாவலுக்கு தனியாக ஆய்வு எதுவும் செய்யவில்லை என்று ராமகிருஷ்ணன் சொல்லியிருந்த போதும், பல வரலாற்று நிகழ்வுகள், இடங்கள், ஒவ்வொரு சமூகத்தினரின் வித்தியாசமான பழக்கவழக்கங்கள், ஆணாதிக்கம் நிறைந்த ஆப்பிரிக்க சமூகம், வெள்ளையர்கள் கொடுமைக்காரர்கள் என்றால் அதன்பின் வந்த கறுப்பினத்தவர் அதைவிடக் கொடூரமாக நடந்து கொள்வது என்று அறுநூறு பக்கங்களும் மேல் வரும் ஏராளமான விஷயங்களைக் கொண்டு, மலையாளத்தில் ஒரு ஆப்பிரிக்க நாவலை
எழுதுவது கற்பனையால் மட்டும் என்பது சாத்தியமேயில்லை. ஆப்பிரிக்க இலக்கிய அரசியலையும் நாவல் தொட்டு செல்கிறது. ஸ்வாஹ்லி மொழியில் எழுதினாலும் வெள்ளையர், ஆசியர் எழுதுவது ஏன் ஆப்பிரிக்க இலக்கியமாகக் கருதப்படாமல் கறுப்பினத்தவர் எழுதுவது மட்டுமே ஆப்பிரிக்க இலக்கியமாகக் கருதப்படுகிறது.
நைஜீரிய எழுத்தாளராக இருந்தும் ஆங்கிலத்தில் எழுதியதால் அமோஸ் டுடுவோளையை ஒதுக்கியது போன்று பல தகவல்களை ஆப்பிரிக்காவை அறியாமல் எழுத முடியாது.

மாதா ஆப்பிரிக்கா யார்? தாராவைப் பொறுத்த வரை அவளைக் காக்கும் தெய்வம். இந்திய நம்பிக்கைகளும், ஆப்பிரிக்க சாயலும் கொண்ட அன்னை. ஆனால் உண்மையில் அவள் ஒரு கற்பனை வடிவம். தாராவின் மனத்தோன்றல். மாதா தாராவின் மற்றொரு நான். துன்பம் வரும் நேரத்தில் எல்லாம் மாதா அருள்பாலிப்பதாக எண்ணிக் கொண்டே தன்னைத் தற்காத்துக் கொள்கிறாள் தாரா. தீயவழிகளுக்குள், அதிகார போதைக்குள் தாரா சிக்கிக் கொள்ளாமல் அவளைத் தடுத்தாட்கொள்கிறாள் மாதா. மாதா தாராவின் நம்பிக்கை. அவளுக்கு முதன் முதலாக சிறுமியாக இருந்த போது ஓவியத்தின் மூலம் வடிவமைத்தது தாராவே.

தாராவின் உடலில் புரட்சிரத்தத்தின் ஜீன்கள் ஏராளமாகக் கலந்திருக்கும். அவளுடைய தாத்தா உஹுரு என்ற சுதந்திரம் வேண்டும் சங்கத்தை ஆப்பிரிக்காவில் தோற்றுவித்தவர். அவனது தந்தை வன்முறை ஆதிக்கத்தை எதிர்த்து இரகசிய கடிதங்களை எழுதியவர். தாராவிடம் போராட்ட குணம் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் அவளிடம் சமயோசித புத்தியும் இருந்தது. இடிஅமீன் பலவந்தமாகக் கடத்திச் சென்று தன்னுடன் வைத்துக் கொண்ட போது, அவருக்கு இணங்காமல் இருந்திருந்தால் அப்போதே உயிர் போயிருக்கும். அவர் இனத்தலைவன் செய்த காட்டுமிராண்டி சடங்குகளை எதிர்த்திருந்தால், எல்லையைத் தாண்ட பட்டாளத்தானின் ஆசைக்கு இணங்காதிருந்திருந்தால், தகப்பன் போல் நினைத்த ஒருவனின் ஆசைக்கு அடிபணிய மாட்டேன் என்று போராடி இருந்தால், பல்கலையில் கடத்திய வன்முறையாளனுக்கு ஒத்துழைப்பை அளிக்கவில்லையென்றால்…… என்பது போல் ஏராளமான சந்தர்ப்பங்களில் அவள் வெள்ளத்தின் வேகத்துக்கு எதிர்நீச்சல் செய்யாதது காப்பாற்றி இருக்கிறது. ஆனால்
அமைதியான சூழலில் அவள் ராமுவை மறந்து, இவானைத் தேர்ந்தெடுத்தது முக்கியமான முடிவு. தாராவை யாரும் சந்தர்ப்பவாதி என்று எளிதாகச் சொல்லலாம், ஆனால் அவர்கள் தாரா கடந்து வந்த பாதையின் வெம்மையைக் கற்பனையிலும் அறியாதவர்கள்.

ராமகிருஷ்ணனின் நான்காவது நாவல் இது.
சரித்திர நிகழ்வை மையமாக வைத்து புனைவை எழுதுகையில், கற்பனைப் பாத்திரங்களை நிஜமாந்தருடன் உரையாட வைப்பது என்பதையும் தாண்டி இவர் கதாபாத்திரங்களின் பாண்டஸியையும் நாவலில் கலக்கிறார். தாரா கற்பனையல்ல என்று வாசகர் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்க எல்லாத் தரவுகளையும் இவர் உருவாக்கும் நேரத்தில், புராணக் கதைகளில் வரும் நிகழ்வுகளும், தேவதைகளும், அசுரர்களும் இடையே வந்து
வாசிப்பவர்கள் உண்மை மற்றும் கற்பனை என்னும் இருகுதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்யும் உணர்வை அடைகிறார்கள்.

பல்லடுக்குகள் கொண்ட நாவல் இது. ஆப்பிரிக்காவின் மூடப்பழக்கவழக்கங்கள், ஆணாதிக்கம், நிறவெறி, இராமாயணம், மலையாள மற்றும் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் இலக்கியம், இடதுசாரிக் கொள்கைகள் என்று பல மடிப்புகளை உள்ளடக்கியது. ராமகிருஷ்ணன் தனது நாற்பத்தி இரண்டாவது வயது வரை எழுதவில்லை என்பது ஆச்சரியம். குறிஞ்சிவேலன் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப்பணியில் இருப்பவர். அவர் மொழிபெயர்ப்பு குறித்துப் புதிதாகச் சொல்ல ஏதுமில்லை. நல்ல நாவல்கள் என்பது ஒரு பயணம். அறியாத இடங்கள், அறிமுகமில்லாத மனிதர்கள் எல்லாம் நமக்கு மிகவும் பரிட்சயமாவது இது போன்ற பிரயாணங்களில் தான்.

பிரதிக்கு:

அகநி 98426 37637
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 650
பக்கங்கள் 615.

Leave a comment