Young தென்கிழக்கு கொரியாவில் பிறந்தவர். சியோலில் பத்திரிகையியலும், பிரெஞ்சும் படித்தவர். முதலாவதாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பிற்குப் பின் வரும் இந்த நாவல் 2022 புக்கர் நெடும்பட்டியலில் இடம்பெற்றது.

இந்த நாவல் Queer Literature. நான்கு பாகங்கள், நான்கு கதைகளை ஒரு மையக்கதாபாத்திரம் இணைக்கின்றது. Queer fiction எனும் போது நாம் எந்த இடம் என்பதையும் பார்க்கவேண்டும். மும்பையில் இரண்டு ஆண்கள் சேர்ந்து வாழ்வது புருவம் உயர்த்துதலுடன் போய்விடும் ஆனால் அம்பாசமுத்திரத்தில் அவர்கள் நிம்மதியாக வாழமுடியாது. அமெரிக்காவில் மிக சர்வசாதாரணமான ஒன்று கொரியாவில்
விலக்கப்பட்ட கனி மீதான ஆர்வத்தையும், பயத்தையும் ஒருங்கே தருகின்றது.

Seoul நகரம் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரம். இரவுநேர சியோல் நாவலின் பெரும்பகுதியில் காட்சிப்படுத்தப்படுகிறது.
தென்கொரியாவில் பாதிக்கு மேல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். புத்தமதத்தைப் பின்னுக்குத் தள்ளி கிருத்துவம் அங்கே பெரும்பான்மை மதமாகி இருக்கிறது. பதின்மவயது மகன் இன்னொரு சிறுவனை முத்தமிடுவதைப் பார்க்கும், ஆழ்ந்த கிருத்துவ நம்பிக்கை கொண்ட தாயின் அதிர்ச்சியை சொல்லவே வேண்டியதில்லை. தனியாகக் குழந்தையை வளர்த்த அம்மா, மகனின் பாலியல் உணர்வு ஒரு தேர்வு என்பதைக் கடைசிவரை ஒத்துக்கொள்ளவில்லை. அவர் கான்சருக்கு அறுவை சிகிச்சை நடத்தும் போது, மயக்கமருந்து கொடுக்காதீர்கள், கர்த்தரின் வலியில் நான் கொஞ்சம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று இறைஞ்சும் பெண்மணி.

இரண்டு வெவ்வேறான வகையில் Active sex life கொண்ட இருவர் (ஆண்,பெண்) ஒரே வீட்டில் குடியிருக்கும் போது எதிர்பாலின ஈர்ப்பு இல்லாது நட்பு மட்டுமே இருப்பது அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பொறாமைகள், எதிர்பார்ப்புகள், கட்டுப்பாடுகள் என்று எதுவுமில்லாத உறவு.
ஆண் அவனுடைய ஆண் துணைகளிடம் ஒரு ஆணுடன் குடியிருப்பதாகச் சொல்கிறான்.
பெண் அவளது ஆண் நண்பர்களிடம், உடனிருப்பது பெண் என்று சொல்கிறாள்.
அவளுக்குக் கருக்கலைப்பு செய்ய வேண்டியிருக்கும் போது, மருத்துவமனை எல்லா இடங்களிலும் இருப்பது போலவே தீவட்டிக் கொள்ளையராக நடந்து கொள்கிறது. ( தென்கொரியாவில் இந்த நாவல் கொரிய மொழியில் எழுதப்பட்ட காலத்திற்குப்பின் 2021ல் கருக்கலைப்பு செய்வது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுகிறது)

பல உறவுகளின் நடுவில் ஒருவரை நினைவை விட்டு நீங்காமல் வைத்திருப்பது தான் உண்மையான காதலா? மையக்கதாபாத்திரம் ஓரிடத்தில் சொல்கிறான் ” If obsession is not love, I have not loved”. The Seven Husbands of Evelyn Hugo நாவலில் Evelyn நூற்றுக்கணக்கான ஆண் பெண் உறவுகளில் ஒரு பெண்ணுடனான உறவை உண்மையான காதல் என்பாள்.
ராமனுக்கு ஒரு மனது, நல்லவர்க்கு ஓர் உறவு என்று வாழ்ந்து முடித்தவர்கள் இதில் ஏதும் அபிப்ராயம் சொல்வதற்கில்லை.
காதலுக்காகக் காதலனை விட்டுக்கொடுப்பது நாவலின் முக்கியமான இழை.

Young 1988ல் பிறந்தவர். அதனால் அவரால் இருபத்தோராம் நூற்றாண்டின் கொரிய இளைஞர்களின் வாழ்க்கையை எளிதாகப் படம்பிடிக்க முடிகிறது. மையக்கதாபாத்திரத்தின் பெயரும் Young தான். ஆகவே சுயசரிதைக்கூறுகள் கலந்திருக்க வாய்ப்புகள் அதிகம். புக்கர் இன்டர்னேஷனல் நூல்களில் மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. Anton Hurன் அசத்தலான மொழிபெயர்ப்பு, கொரியமொழி தெரியாமலேயே Young சொல்லவருவதை நம்மைப் புரிந்துகொள்ள வைக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s