இது ஒரு விஞ்ஞானக்கதை. விஞ்ஞானக் கதை என்றால், பெருவாரியான கதைகள் ஆரம்பிப்பது போல், அது கிபி 3200வது வருடம் என்று இந்தக்கதை தொடர்வதில்லை. இதில் காலம் மௌனமாக இருக்கிறது. அடுத்த வருடத்தில், ஐந்து வருடங்களில் இல்லை ஐம்பது வருடங்களில், எப்போது வேண்டுனாலும் நாவலின் முக்கியபகுதி நிதர்சனமாகும் சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன.

வங்கியில் செய்யும் முதலீடுகள், பத்திரங்களில் செய்யும் முதலீடுகளுக்கான
வரவுச்சீட்டை, நாம் நடுஇரவில் தூக்கத்திலிருந்து முழித்தாலும், அலமாரியில் இருந்து எடுத்துச் சரிபார்த்துக் கொள்ளலாம். பங்குச்சந்தையில் செய்யும் முதலீடுகள் மின்னணுக் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. மொத்தத்தில் எல்லா முதலீடுகளுமே ஸ்தூல வடிவிலோ, சான்றிதழ் வடிவிலோ, இந்தமதிப்பிற்கு, இவரால், இவருக்கு அளிக்கப்பட்டது என்ற விவரங்கள் அடங்கியதாக இருக்கும். ஆனால், கிரிப்டோவில் செய்யும் முதலீடுகள் அபரிதமான லாபத்தையோ அல்லது இழப்பையோ குறுகியகாலத்தில் ஏற்படுத்தும் வகையில் பண்டமாற்றுச் சந்தையை ஒத்திருந்தாலும் அதில் இருப்பது போல் குறிப்பிட்ட நிறுவனம் வரவுசெலவுக் கணக்கிற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிரிப்டோவில் இல்லை. நீர்குமிழ் போல் இருந்த இடம் தெரியாது மறைந்து போனாலும், நாம் உரிமைகோருவது எவரிடம் என்ற தெளிவில்லை. ஒருவேளை, கிரிப்டோ முதலீடுகளைச் செய்பவரே, அவர்கள் உடலில் அதற்கான சான்றை சுமப்பவர்கள் என்றால், ஆபரணத்தை அணிவது போன்ற பெருமிதமும், நம் பணம் நம்மிடமே என்ற பாதுகாப்பும் இணைந்து கிடைக்குமல்லவா? அந்தக் கற்பனையை (இன்றைய தேதிக்கு)
விரித்து எழுதப்பட்டதே இந்த நாவல்.

கதை என்று நேர்க்கோட்டிலோ, நான்லீனியரிலோ சொல்லப்படும் கதை என்று எதுவும் இல்லை இந்த நாவலில். மெடாவேர்ஸ் என்ற டிஜிட்டல் உலகத்தின் அத்தனை சமன்பாடுகளும், பயன்பாடுகளும் இந்த நாவலில் சரளமாக வந்து புழங்குகின்றன. அந்தவகையில் இந்த நாவலை விஞ்ஞான நாவல் என்று சொல்வதை விட மெய்நிகர் உலக நாவல் என்று சொல்லலாம். மெய்நிகர் உலகில் எதிர்வினைகள் எப்படி ஒரு கும்பல் மனப்பான்மையை உலகமெங்கும் விதைக்கின்றன என்பதை நாவலில் வரும் பெண்ணின் முதுகில் பச்சை குத்தும் உதாரணத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

காகிதங்கள் அருங்காட்சியில் மட்டுமே இருக்கும் உலகம். தானியங்கி வாகனத்தில் போய்க்கொண்டிருக்கும் ஒருவன், காரை நிறுத்தினால் டேரட் குறிசொல்லும் கனவு மங்கை வருகிறாள். அவள் புதிய தொழில்நுட்பத்திற்கு ஒரு கருத்தியலை இலவசமாக வழங்கிப்போகப் போகிறாள். பச்சைக் குதிரை விளையாட்டும் ஆடுபுலியாட்டமும் இணைந்து தொழில்நுட்பத்தின் பாதுகாப்பம்சங்களை ஸ்திரப்படுத்தப் போகின்றன. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவன் பங்குபெறும் இன்றைய உலகத்தொழில்நுட்பத்திற்கு நம் முன்னோர்கள் விட்டுப்போனவை பலவும் உதவிகரமாக அமைகின்றன.

மெடாவேர்ஸ் மெய்நிகர் உலகம், அங்கே நிஜங்கள் வேறு. அதற்காக இவர் Lord of the Rings நூல் உதாரணத்தை எடுத்திருப்பது சுவாரசியமானது. சொல்லப் போனால் எல்லாக் கதைகளுமே வேறொரு உலகத்தை சிருஷ்டி செய்து, நம்மை அதில் நடமாட வைக்கின்றன. அது ஆலிஸின் உலகமாக இருந்தாலும் சரி, ஹாரிபார்ட்டரின் உலகமாக இருந்தாலும் சரி.

முழுக்கவே தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நாவலில் பல அருஞ்சொட்பொருட்களை எளிதாகச் சொல்லிப் போகிறார். கதையில்லாத கதையின் மொழிநடை பளபளத்தரையில் சிந்திய எண்ணெய்யின் மேல் கால்வைத்தது போல் வழுக்கிக் கொண்டு செல்கிறது, எந்த இடத்திலும் தங்குதடையேயில்லை. படைப்புப் பணி, பதிப்புப்பணி, விமர்சனம் என்று பலதளங்களிலும் இலக்கியத்திற்கும் தனக்கும் எப்போதும் இடைவெளி இல்லாது பார்த்துக் கொள்பவர் கௌதமசித்தார்த்தன்.
இந்த நூலை இருபதே வயதானவர் தான் எழுதியுள்ளார் என்றால் பலர் நம்பக்கூடும். அதே போல், இந்த நாவலை ஆங்கிலத்தில் அல்லது வேறுமொழிகளில் நல்லவிதத்தில் மொழிபெயர்த்து மூலமே அந்த மொழி தான்
என்று நம்பவைக்க முடியும். இந்த நாவலில் இருக்கும் உலகத்தன்மை (globalness) இதை எல்லா நாட்டினரும் புரிந்து கொள்ளும், நெருக்கமாக உணரும் நாவலாக்கி இருக்கிறது. இந்தநாவலின் தனித்தன்மை அதுவே என்றும் கூறலாம்.

Leave a comment