அரைப்பனை- சரவணன் சந்திரன்:

சாமியாடி பற்றிய கதைகள் ஏராளம். சொல்லச்சொல்ல சுவாரசியமானவை. சுடலைக்கு ஆதரவு எவ்வளவு இருந்திருக்கிறதோ அவ்வளவு வெறுப்பும் சம்பாதித்திருக்கிறார். கடைசிவரை சுடலை குறித்த மர்மத்திரை விலக்கப்படாமலேயே
இருக்கிறது. மயில்சாமி சொல்வதில் பாதிப் பொய், மீதி உண்மை இருக்கலாம். எது எப்படியானாலும் அந்த கடைசிப் புறக்கணிப்பு மட்டும் ஊர்க்காரர்கள் பலர் பார்த்ததால் நிஜம். வெறுப்பு மண்டிக் கிடந்த சுடலையால் அதைத் தாங்க முடியாமல் போயிருக்க வேண்டும். சிறப்பாகச் சொல்லப்பட்ட கதை.

எட்டு நிமிடங்கள் – இந்திரா ராஜமாணிக்கம்:

இந்திரா போல் வெகுசிலருக்கே ஆரம்ப காலகட்டங்களிலேயே எழுத்தில் ஒரு முதிர்ச்சி வந்து விடுகிறது. ஒவ்வொன்றாக விட்டு விடுதலையாதல் என்பது நிரஞ்சனுக்கு விதிக்கப்பட்ட விதி. கடிதம் மூலம் முழுக்கதையும் சொல்லப்படும் போது,
( Kanae Minatoன் Penance நாவல் கடிதங்கள் மூலம் சொல்லப்படும் நாவல்) மொழிநடை அழுத்தமாக இருந்தால் மட்டுமே அத்தனை
உணர்வுகளையும் கதையில் வெளிப்படுத்த முடியும். அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் இந்திரா. Bisexuality கூட தமிழில் அதிகம் பேசப்படவில்லை. அதை இந்தக் கதையில் நுட்பமாகக் கையாண்டிருக்கிறார். இந்திரா தொடர்ந்து எழுத வேண்டும்.

முள் – எம்.கே.மணி:

சற்றே வயது கூடிய பெண்களின் நட்பு, பதின்மவயதுகளில் கொடுத்த கிளுகிளுப்புக்கு இணையாகப் பின்னால் எந்தப் பெண்ணின் சகவாசமும் இனிக்கப் போவதில்லை. மஞ்சு மட்டுமல்ல, எந்தப் பெண்ணும் அழகியாகத் தெரிவது தோற்றப்பிழையல்ல, வயசுக்கோளாறு. மணியின் பெரும்பாலான கதைகளைப் போலவே எண்ணங்களின் பின்னோக்கிய பயணம் இதிலும் நிகழ்கிறது. காதலித்ததாக நாம் நம்பிய பெண்களைப் பின்னால் வறியநிலையில் பார்ப்பது ஒரு தண்டனை. வெளிறிய மஞ்சு. ‘”அதற்கு என்ன இப்போது?” என்பது மணிக்கே உரித்தான அழுத்தமான வார்த்தைகள். அனாவசியமான வார்த்தைகளே இல்லாத கதைகள் மணியின் கதைகள்.

இசைவு – ராசேந்திர சோழன்:

கயிற்றில் நடப்பதைப் போல் கவனமாகக் கையாள வேண்டிய கதை. கொஞ்சம் பிசகினாலும் சரோஜாதேவிக் கதை சாயல் வந்து விடும். பெற்றெடுக்கும் குழந்தைகள் பெண்களுக்கு எப்படி ஒரு அசைக்கமுடியாத உரிமையைக் கொடுக்கின்றதைத் திறமையாகச் சொல்லியிருக்கிறார் இராசேந்திர சோழன். இசைவு என்பது ஒரு வகையில் தோல்வியை ஒப்புக் கொள்வது மட்டுமல்ல, காவலும் காப்பது.

செவ்வந்தி – ஜான் ஸ்டெயின்பெக்- தமிழில் கமலக்கண்ணன் :

அமெரிக்காவில் பெண்களின் எழுச்சிக்கு முன் எழுதப்பட்ட கதை. ஒவ்வொரு ஆணிலும் பெண்ணுண்டு, பெண்ணில் ஆணுண்டு. எத்தனை சதவீதம் மறுபாலினத்தின் தாக்கம் என்பது தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. எலிசாவில் சரிபாதி ஆண். ஆனால் அதை அவள் வெளிக்காட்ட முடியாது, கணவனும், மற்றவர்களும் நீ ஒரு பெண் என்பதை நினைவுறுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். அதைத் தாண்டித் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல், தோல்வியை ஒப்புக்கொள்ளவது எலிசா காலத்தியப் பெண்களின் தலைவிதி. எளிமையான மொழிபெயர்ப்பு கமலக்கண்ணனுடையது.

Leave a comment