ஆசிரியர் குறிப்பு:

சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் பயின்றவர். பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். புனைவுகள், அல்புனைவுகள் இரண்டையுமே எழுதும் இவர் இதுவரை இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இது இவரது சமீபத்தில் வெளிவந்த நாவல்.

நம்மிடம் கடந்த ஐநூறு ஆண்டுகள் வரலாறு என்பதே துல்லியமாக இல்லை. CSK (சி. சரவணகார்த்திகேயன்) முன்னுரையில் சொல்வது போல் கல்வெட்டுகளை முழுமையாக நம்புவதற்கில்லை. The Betrayal of Anne Frank: A Cold Case Investigation என்பது சமீபத்தில் வெளியான, ஆனியை யார் காட்டிக் கொடுத்திருப்பார்கள் என்ற விசாரணையின் அடிப்படையில் எழுதப்பட்டது. பல கோடி ரூபாய்கள் செலவில் முப்பத்தோரு பல்துறை நிபுணர்கள் கொண்ட குழு (FBI agent உட்பட), இருபதுக்கும் மேற்பட்ட ஆலோசகர்கள், இருநூறுக்கும் மேற்பட்ட உதவியாளர்கள், ஆறுவருடத்திற்கு ஆய்வு செய்து, பல்வேறு கோணங்களில் நவீன ஆய்வுயுத்திகளை உபயோகித்து, பல சந்தேகத்துக்கிடமானவர்களை ஒவ்வொருவராக கழித்து, கடைசியாக குழு அடையாளம் கண்டுபிடித்தது ஒருவரை.
இத்தனை ஆய்வுக்குப்பிறகும் அவராக இருக்க 85% சாத்தியக்கூறு இருப்பதாகக் குழு சொல்கிறது. இவ்வளவிற்கும் சம்பவம் நடந்தது 1944, அச்சுப்பிரதிகளின் காலம். இந்தப் புரிதலோடு இந்த நூலை அணுக வேண்டும்.

” பொன்னியின் செல்வன் நாவல் ஒரு நவீன
வாசகனுக்கு உவப்பானது அல்ல”. உண்மை. மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நவீன வாசகனுக்கு உள்ளடக்கமும் முக்கியமானது.
சுவாரசியமான மொழியை நவீன இலக்கியம் என்று நம்பும் வாசகர்கள், கேரளாவில் பிறந்து ஒரு நாவலுக்காக கல்கத்தாவின் தெருக்களில் சுற்றித்திரிந்த,
யூதர்கள் பற்றிய நாவலுக்காக உலகின் பல பகுதிகளுக்குச் சென்று வந்த, பர்மா பெரும்பகுதி கதையில் வருவதால் பர்மாவில் சுற்றித்திரிந்த, எழுத்தாளர்களை அவமதிக்கிறார்கள். ஆயிரம் வருடம் முன்பு காலப்பயணம் செய்ய முடியுமா என்று கேட்பவர்கள் இருபதுகளில் இருக்கும் பெண் எழுதிய Kaikeyi நாவலைப் படித்துப் பாருங்கள். CSK அதிகமான உழைப்பைக் கோரியது என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த நாவலும் ஒரு நவீன வாசகனுக்கு (கவனமாகப் படியுங்கள் இலக்கிய வாசகனுக்கு என்று நான் உபயோகிக்கவில்லை) உவப்பானதாக இருக்க முடியாது. கற்பனையே பெரும்பங்கு வகிக்கும் இந்த நாவலில் தட்டையான மொழிநடை, வலுவில்லாத சம்பவக்கோர்வை, காமம் என்ற கற்பனையில் விடாது நடக்கும் உளறல்கள் என்று தொள்ளாயிரம் பக்கத்திற்கு நம்மைத் துரத்தும் நாவல்.

Stephen Kingன் 11/22/63 நாவல் ஒரு Historical thriller. Historical thriller என்பது ஆங்கிலத்தில் முக்கியமான ஒரு ஜானர். யவனராணியில், சாம்பிராணி தேசத்தில் இருந்து அலிமாவுடன் திரும்பிய இளஞ்செழியன் யார் என்பது தெரியாமல் சில பக்கங்களுக்கு ஒரு Suspense இருக்கும். முழுநீள சரித்திரத் திரில்லரை தமிழில் நான் படித்ததில்லை. அநேகமாக CSK, whodunit பாணியில் எழுதிய இந்த நாவலே முதலாவதாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் பொய்த்தது. (தமிழில் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு Genuine thriller books வராது என்ற என் கருத்தை CSKயும் நிரூபித்திருக்கிறார்.) சரித்திர நாவலில் இன்றைய ஆண்மனங்களின் சிந்தனைகள் வருவதும் இதுவே முதல்முறை. ” வெட்டவெளியில் விபத்தாக வாய்த்த ஒரு புணர்ச்சியை அச்சத்தோடு அரைமனதாக அனுபவிக்கும் கன்னிப்பெண் போல இருந்தது அப்போது அவனது மனநிலை”.
“பெயரே தெரியாமல் கோவணம் அவிழ்த்தாயிற்று”.

CSKயின் வரலாற்று நாவலில் வரும் பெண்கள் எல்லோருமே அதிரூப சுந்தரிகளாக வருகிறார்கள். சேலை மூடிய போதும் கொங்கைகளை வைத்து அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய பெண்ணும் வருகிறாள். சாண்டில்யனைப் பார்த்து எல்லாப் பெண்களும் மயங்குகிறார்கள். அடுத்தவாரம் மணநாள் வைத்திருக்கும் பெண்ணும் விரல்தீண்டிக் குடுவையைக் கொடுக்கிறாள். சாண்டில்யன் ஆயிரம் ஆண்டுக்கு முன்போன சுஜாதாவின் வசந்த் போல “விரல்வித்தையிலேயே உங்களை மயக்கிவிட்டார்” என்று ஒரு பெண்ணிடம் சொல்கிறான். அப்போது தான் பார்த்த பெண் மாதாந்திர வயிற்றுவலியின் கடுமை குறித்து சாண்டில்யனிடம் விசனப்படுகிறாள்.

புராணக்கதைகளில் நாம் ஓட்டும் கற்பனைக்குதிரையை வரலாற்றுக்கதைகளில் ஓட்ட சாத்தியமில்லை. ஆனால் ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பது தெரியாமலேயே போய்விட்டது. அதனால் கல்கி காலத்தில் இருந்தே ஆயிரம் யூகங்கள்.
ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. எனவே இறந்து போன சுந்தரசோழர், அவர் பத்தினி இருவரைத் தவிர எல்லோரும் சந்தேக வட்டத்திற்குள் வருகிறார்கள். அந்தக் காலகட்டத்தின் புரட்சிகரமான சிந்தனைகள் ஆதித்த கரிகாலனுக்கு ஆபத்தாக அமைகிறது. பார்ப்பன எதிர்ப்பு காரணமாக அநிருத்த பிரம்மராயரைப் போட்டுத் தள்ளவேண்டியதாகிறது. புனைவில் படைப்பாளிக்கு இருக்கும் அதிகாரம் அமெரிக்க ஜனாதிபதியை விடக் கூடுதலானது.

ஆனால் உதட்டில் லிப்ஸ்டிக்குடன் விஷத்தைத் தடவி பிரெஞ்சு முத்தம் கொடுத்துப் பின் (ஏதோ ஆங்கிலப் படத்தில் இப்படிக் கொல்வதைப் பார்த்த ஞாபகம்.) உடனடி முறிவுமருந்து என்பதில் புனைவை விட நகைச்சுவை அதிகமாக இருக்கிறது. சங்கமித்திரைக்கு அந்த பதினோரு பேரை அடையாளம் காட்டியது யார்? போரென்றால் பாலியல் வல்லுறவு என்பது காலையில் சூரியன் உதிக்கும் என்பது போல் தவறாத நிகழ்வாயிற்று அதற்கு நாடுவிட்டு நாடு வந்து அடுத்த தலைமுறை பழிவாங்குவது என்பது……… கண்ணபிரான் முறிவுமருந்து குறித்துக் கேட்டிருந்தால் வைத்தியரிடம் விசாரணை நடந்த போதே சொல்லி இருப்பார் இல்லையா? இது போல் ஏராளமான இடங்கள். எனக்கு மட்டும் லாஜிக் இல்லாத விஷயங்களாகத் தோன்றுவது ஏன் பலருக்கும் தோன்றுவதில்லை.

செம்பியன் மாதேவி, மதுராந்தகனின் குற்றங்களைப் பொறுத்து அவனை நாடாளச் செய்ய அத்தனை வேலைகளும் நடத்துவதாக நாவலில் சித்தரிக்க என்ன ஆதாரம்? வரலாற்றில் வாழ்ந்த ஒருவர் புராணக்கதைகளில் வருபவர் அல்லர், புனைவுக்காக Character Assasination செய்யலாமா? அவர் சிவனடியாராக இருந்து, சிவாலயங்களை ஏராளமாகக் கட்டி வாழ்க்கையைக் கழித்தது என்பது அவ்வளவு பெரிய குற்றமா? பின்சேர்க்கையில் இது சரித்திர நூலல்ல, சரித்திரப் புனைவு என்ற பதிலையும் படித்துவிட்டேன். திராவிடச் சிந்தனைகளை நாவலில் உபயோகிக்க நினைக்கும் தவிப்பு புரிகிறது.

ஜெயமோகன் குடும்பமே ஒரு அத்தியாயத்தில் மணிவிழா கொண்டாட வருகிறது. பதில் மரியாதையாக அவர் இந்த நாவல் குறித்து என்ன எழுதியிருக்கிறார் தெரியவில்லை. பொதுவாக நான் ஜனரஞ்சகக் கதைகளைத் தேடிப் படிப்பதில்லை. இந்த நாவலுக்கான பரபரப்புகள், Overhypeகள் விளக்கைத் தேடும் விட்டில்பூச்சியாக்கியது என்னை.

முகநூல் ஒரு மாயையை உருவாக்குகிறதா இல்லை பெரும்பான்மை மக்களின் ரசனையே அப்படியாகிவிட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை. CSK இது போன்ற நூல்களை எழுதுவதோ அதை பதிப்பகங்கள் வெளியிடுவதோ குறித்து நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் வழிப்போக்கன். எனக்கு இதில் லாபநட்டம் ஏதுமில்லை. ஆனால் வாசகனாக ஒரு இனம்புரியாத வருத்தம் வருகிறது. நொய்யல் போன்ற நாவல்கள் இது போல் பரபரப்பாகப் பேசப்பட்டு இருக்க வேண்டும். அவற்றை இரண்டு கைவிரல்களின் எண்ணிக்கையைத் தாண்டி யாரும் பேசப் போவதில்லை. எது போன்ற வாசகசமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! தமிழில் இலக்கியம் எழுதுபவர்கள், எழுத முயல்பவர்களைப் பார்த்து நான் சொல்ல விரும்புவது இது தான், ” I really pity you!”

பிரதிக்கு:

கிழக்கு பதிப்பகம் 044- 4200 9603
முதல்பதிப்பு அக்டோபர் 2022
விலை ரூ. 1000.

Leave a comment