கதவு- குஜராத்தி மூலம் ஹிமான்ஷி ஷேலாட் – தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:

அனுராதாவின் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுப்பாக வருவதாக ஆவநாழியில் அறிவிப்பு வந்திருக்கிறது.
Ecuador, Côte d’Ivoire நாடுகளின் கதைகளை மொழிபெயர்க்கும் ஆர்வம் கூடியிருக்கும் காலகட்டத்தில் இந்தியமொழிகளின் சிறந்த சிறுகதைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தது நல்ல முயற்சி. என்னைப் பொறுத்தவரையில் பத்திருபது அனுராதாக்களேனும் தமிழுக்கு வேண்டும். ஆனால் ஒரு அனுதாவின் தொகுப்பே இப்போது தான் வரும் சூழல் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மிட்டாய் தருகிறேன் வா என்று அழைத்தால் போகும் அப்பாவிப் பெண்கள் கொண்ட நாடு இது. கதவு சாவ்லியும் அப்படி ஒரு பெண். ஆனால் இவளுக்கு மிட்டாய் வேண்டியதில்லை, நிம்மதியாகப் போக Toilet வேண்டும். திறந்தவெளியில் உட்கார்ந்து மலம் கழிப்பதில் நூறு சிக்கல்கள். அதற்கு பயந்து நான்கு நாட்கள் மலம் கழிக்காமல் இருப்பது கதையின் முதல்வரியிலேயே வந்து விடுகிறது. தொடர்ந்து சாவ்லியின் பல பிரச்சனைகள் சொல்லப்படுகின்றன. நடுஇரவில் அப்பா ஏன் வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்திக் கொள்கிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை. விதி அவளுக்கு அதைக் கொடூரமான முறையில் சொல்லிக் கொடுக்கப் போகிறது. வழமை போல் அனுராதாவின் எளிமையான, தெளிவான மொழிபெயர்ப்பு.

நாளும் கிழமையும் – ஜெயந்தி கார்த்திக்:

லிங்கம் என்று நல்லதொரு நாவலை எழுதியவர். அதிகம் கவனிக்கப்படாமலேயே அது போனது.

சிறுகதை வடிவம் என்பது வேறு. அதை அழுத்தமாகச் சொல்ல நல்லதொரு கரு வேண்டும். இல்லை Presentationல் அதைச் சமன் செய்ய வேண்டும். இந்தக் கதை சராசரிக்கும் கீழான கதை, ஜெயந்தியால் நல்ல சிறுகதைகள் எழுதமுடியும்.

கதையும் காலமும் – லாவண்யா சுந்தரராஜன்:

புராணப் பாத்திரங்கள் இருபத்தோராம் நூற்றாண்டில் வந்து சிக்கிக் கொள்வதைத் தொடராக செய்து வருகிறார் லாவண்யா.
முதல் கதை புராணக் கதை, அடுத்தது இன்றைய நாளின் அதே புராணப் பாத்திரங்களை வைத்து. லாவண்யா ஒரு
compulsive modern story writer. அதனால் அவருடைய இரண்டாவது கதைகளில் எப்போதும் அழுத்தம் கூடுதல். இந்தக் கதையில் கங்காவிற்கு எழும் பரிதாபம் மிக நுட்பமானது. எல்லோர் வாழ்க்கையும் இப்படித்தான் ஏதோ ஒன்றைப்பற்றிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

காவேரியும் கம்சலாவும்- வளவ துரையன்:

இது போன்ற கதைகளைப் பிரசுரிப்பதை விட பக்கங்களை வெள்ளையாக விடுதல் உ.த்தமம்..

சின்னக்குழந்தை சட்டம் – பிஜு சிபி – மலையாளத்தில் இருந்து தமிழில் அரவிந்த் வடசேரி:

கதை முடிந்த பின்னும் மீதி எங்கே என்று தேடிக் கொண்டிருந்தேன். முடிவு Open ending என்று நினைத்து விடாதீர்கள். கதையே அவ்வளவு தான். ஒருவேளை Under age பெண் கர்ப்பமாவதில் கதையா இல்லை ஜெயிலில் போடுவது கதையா தெரியவில்லை. அரவிந்த்தின் மொழிபெயர்ப்பு மிகவும் சரளமாக வந்திருக்கிறது.

Leave a comment