பொம்மைகளின் உரையாடல்கள் – கே.ஜே.அசோக்குமார் :

புதுமைப்பித்தனின் துரோகம் கதையில் வேணு புலம்புவான். என்னுடைய ஒரே ஆடையான இலக்கியஉடுப்பைப் பறித்து என்னை அம்மணமாக்க முயல்கிறான் என்று. அன்னம் அதையே மாலினிக்குச் செய்கிறாள். மூன்று பெண்களின் ஆட்டத்தில் பாஸ்கரன் பொம்மை. சாமியாடுவதை சாதகமாக்கிக் கொள்வது எப்போதுமே நடப்பது. இது பொம்மைகளின் கதையல்ல, மனிதர்களின் கீழ்மை பற்றிய கதை. நன்றாக வந்திருக்கிறது.

வாலெயிறு ஊறிய நீர் – அகராதி:

அகராதியின் சிறுகதைகளில் முன்னைவிட நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கால மயக்கத்தைத் தாண்டி இந்தக் கதையில் ஒரு பெண்ணின் அகம் அவள் சிறுவயதாய் இருந்ததில் இருந்து தெளிவாகச் சித்தரிக்கப்படுகிறது. காமத்தில் Choice என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் வேறுபடுவதை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறார் அகராதி இந்தக் கதையில்.

கயிறு – கண்ணன் ராமசாமி :

சிறுகதைகளில் கூடுமானவரை சொற்சிக்கனம் அவசியம். இந்தக் கதையில் ஷோபனா, கமலி குடும்பம், பரிமளம் குடும்பம் முதலியோரின் பங்கு எதுவுமில்லை. சூழலை விளக்கச் சொன்னால் வயதான பெண்ணும், இளம் வயது மகளும் என்று சொல்லலாம். எழுத்தாளரே கதைசொல்லும் பாணியில் இப்படிக் கதைகள் எழுதலாம். ஆனால் இப்போது யாரும் அப்படி எழுதுவதில்லை. அத்தனை நாட்கள் பராமரித்தவனை ஏன் விட்டுப் போனாய் என்று மட்டும் எப்படி கேட்க முடியும்?

விருட்சங்களின் ஆதிவேர் – ந.சிவநேசன் :

இதில் வரும் பாட்டி மட்டுமல்ல, வந்த வழி மறந்து தான் தன் குடும்பம் என்ற மகன்களைப் பெற்ற பல தாய்கள் கண்ணீரைத் தனிமையில் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். உறவுகள் சந்தர்ப்பத்திற்கேற்ப நிறம் மாறும். கதையின் ஆரம்பவேகம் கடைசி வரி வரை குறையாமல் இருக்கிறது.

தேன் பந்தல் விளையிலும் கண்ணன் தூங்கவில்லை – கு.கு.விக்டர் பிரின்ஸ்:

ஆணின் கௌரவம் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றுவதிலா இல்லை விட்டுப்பெண்களின் ஒழுக்க நடவடிக்கைகளிலா என்றால் இந்தியாவில் பின்னதே வெல்லும். பிழைக்க வழியில்லாது அம்மா, பெண்கள் இருவர் தொழிலை மகிழ்வுடனா செய்வார்கள். சமூக உளவியல், பேய்பயம், நாஞ்சில் நடை இவற்றுடன் Victimsஐ குற்றம்செய்தவராக கதையை அமைத்திருக்கும் கோணம் என்று எல்லாமே நன்றாக வந்திருக்கிறது இந்தக் கதையில்.

மீண்டும் யூதரா – கவிஜி:

Gothic story. வளர்த்து விட்ட ஆவி மார்பில் பாயும் கதை. Paranormal storyக்கு வேண்டிய எல்லாவித விஷயங்களும் அடங்கிய கதை. நன்றாக வந்திருக்கிறது. மொழிநடையும் வாசகரை Edge of the chairல் இருத்தி வைத்திருக்கிறது.

இழவு – பிரசாந்த் வே.

எந்த உறவுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் இருந்தே ஆக வேண்டும், அவை சமமாக இல்லாதிருந்தாலும். இல்லை எனில் கசந்து தான் போகும் என்பதே இந்தக் கதை சொல்ல வருவது. பாட்டியின் சாப்பாட்டு ஆசை, பாட்டி-பேரன் உறவு, நீளும் ஆயுள் கொடுக்கும் சலிப்பு என்று இயல்பாகச் சொல்லப்பட்ட கதை.

ஒறு – தேவிலிங்கம் :

தேவிலிங்கத்தின் கதைகளில் சமீபத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தெரிகிறது.
வெளியே திமிராக, வாயாடியாக நடந்து கொள்ளும் பெண்கள் உள்ளுக்குள் எவ்வளவு மென்மையாக இருக்கிறார்கள், இன்னும் திருமணங்கள் பெண்ணின் விருப்பமில்லாது பெற்றோர் விருப்பப்படி நடப்பது முதலியவற்றை கதையில் அழகாகக் கொண்டு வந்திருக்கிறார். மனபாதிப்பா, பேய் பிடித்ததா என்பதை Open endingஆக விட்டிருப்பது சிறப்பு.

மி – பிறைமதி குப்புசாமி:

கனவும் நனவும் ஒன்று கலக்கின்றன. கனவில் வரும் கதைகள் நீளமானவை, தெளிவானவை.

இந்த நாள் – ஒரு கூண்டுக்கதை – கவிஜி:

இருத்தலுக்காக செய்யும் வேலை, மொத்தத்தையும் உறிஞ்சி சக்கையை வெளியே அனுப்பும் போது, அறையல்ல, தனி வீடே இருந்தாலும் இயல்பான தாம்பத்யம் கடினம்.

இந்த இதழில் Over all கதைகள் தரமாக வந்திருக்கின்றன. பாராட்டுகள் சந்தோஷ் குமார்.

Leave a comment