இணைய இதழ்களின் வளர்ச்சிக்குப் பிறகு, தமிழில் பெண்கள் எழுதுவது அதிகரித்திருக்கிறது. தேவியில், மங்கையர்மலரில் என் கதை வந்திருக்கிறது என்று உற்சாகம் கொப்பளிக்கும் குரல்கள் குறைந்து, அந்த இதழில் நான் எழுதிய கதையை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏன் என்று கேட்கும் குரல்கள் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

எல்லோருக்கும் சொல்வதற்குக் கதைகள் இருக்கின்றன. கூச்சம் காரணமாகப் பல கதைகள் சொல்லப்படாமல் போகின்றன. தமிழில் சொல்லப்பட வேண்டிய கதைகள் சொல்லப்படாமலும், எல்லாவற்றையும் சொல்லி முடித்த ஆண்கள் இடைவிடாது கதைகளில் தொணதொணத்துக் கொண்டிருப்பதும் சமீபத்தில் அதிகமாகி இருக்கின்றன. என்னிடம் புத்திசாலித்தனமாகப் பேசும் பல பெண்கள் வீட்டில் முட்டாள்வேடம் போடுவது இப்போதெல்லாம் ஆச்சரியம் அளிப்பதில்லை. அவர்கள் பேச நினைப்பதைச் சொல்வதற்கு கதைகளைத் தவிர வேறு வழியில்லை. உலகின் தலைசிறந்த சிறுகதையாசிரியர் என்று பலரால் பாராட்டப்படும் ஆலிஸ் மன்ரோ குடும்பப் பொறுப்புகளின் இடையே நேரமின்மை காரணமாக சிறுகதைகள் மட்டும் எழுத முடிந்ததாகச் சொல்லி இருக்கிறார்.

என்னுடைய விமர்சனத்தை, அறிமுகக்குறிப்புகள் என்று பலரும் திடமாக நம்புவதால் கீழே வருவனவற்றையும் குறிப்புகள் என்று நீங்கள் எடுத்துக் கொள்வதில் எனக்கு எந்தவித மறுதலிப்பும் இல்லை:

  1. எழுத்துக்கு ஆண் பெண் என்ற பேதம் கிடையாது. பெண்ணெழுத்து என்று சொல்வதெல்லாம் Pedestaல் தாம் நிற்பதாக நினைக்கும் ஆண்கள் சொல்பவை.
  2. நீங்கள் பெண்ணாக இருப்பதால் கதைகளில் பெண்ணுக்கு நீதி கிடைக்கச் செய்ய அயராது பாடுபடாதீர்கள். கலை என்பது வேறு, நீதி நியாயம் என்பது வேறு.
  3. முதல் கதையிலேயே எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். கதைகள் உங்களுக்கு ஒரு Outlet. அதை எழுதி, வெளியான பின் உங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்புமில்லை.
  4. எவ்வளவு சிறந்த எழுத்தாளருக்கும், முதல் Draft, Perfectஆக அமையாது.
  5. வாழ்வியல் அனுபவங்களை விட உன்னதமான கதைகள் வேறெங்குமில்லை.
    அவற்றில் புனைவைக் கலந்து அடையாளங்களை அழித்தால் கதைகள் தயாராகின்றன.
  6. ஒரு கருவை முடிவு செய்த பின் அந்தக் கதையின் வெவ்வேறு சாத்தியக்கூறுகளை யோசித்துப் பாருங்கள். Multiple storylinesல் உங்களுக்கு Impressiveஆக இருப்பதைத் தேர்ந்தெடுங்கள்.
  7. பத்து பக்கங்கள் என்று யாரேனும் சொன்னார்கள் என்று கதைகள் முடிந்த பின்னும் அதைத் தொடராதீர்கள். கதைகள் தான் பக்க அளவைத் தீர்மானிக்கின்றன. நீங்களோ, பத்திரிகையாசிரியரோ அல்ல.
  8. சிறுகதைகளில் உரையாடல்கள் மிகுந்த அழுத்தத்தைக் கொடுக்க முடியும். உரையாடல்களை நன்றாக அமைத்தவர்கள் எல்லோருமே Successful writersஆக இருப்பதைக் கவனியுங்கள்.
  9. பிறழ்காமம், Profanity முதலியன இலக்கியத்தில் தவறில்லை. ஆனால் அது மட்டுமே இலக்கியம் இல்லை. அவர்களது அகஉளைச்சல்களை வாசகருக்குக் கடத்துவதே இங்கு முக்கியம். தங்கம்மாள் பாபுவுடன் கொண்ட உறவுக்கு நீங்கள் அவள் மேல் பரிதாபமே அடைந்தீர்கள். சீ என்ன பெண் இவள் என்று யாரும் சொல்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.
  10. கதைகளில் பாதிக்கப்படும் பெண், கூடுமானவரை உங்கள் சாயலில் இருப்பதைத் தவிருங்கள். கவிதையில் மார்பகம் வந்தால் அது அந்தக் கவிஞருடையது தான் என்று உறுதியாக நம்பும் கூட்டம் இங்கிருக்கிறது.
  11. சிறுகதைகளில் கூடுமானவரை கதாபாத்திரங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துங்கள். ” அவள் ஜன்னல் வழியே பார்த்த போது தயிர்க்காரி சாவித்திரி, அங்கே காய்கறி விற்கும் முத்துச்சாமியுடன் சிரித்துப்பேசுவதை, ராஜூ பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்” என்றால் நான் அவளை மறந்து தயிர்க்காரி பின்னால் போய்விடுவேன்.
  12. பொதுவாகச் சிறுகதைகள் ஆரம்ப வேகத்தைக் கடைசிவரை இழக்காமல் இருக்க வேண்டியது அவசியம். பெரும்பாலான வாசகர்களுக்குப் பொறுமை இருப்பதில்லை.
  13. சிறுகதைகள் Conflict இல்லை என்றால் செய்தித்தாளை வாசிப்பது போன்ற உணர்வை அளிக்கக்கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட Conflictsஐ சிறுகதைகளில் திணிக்காதீர்கள்.
  14. எதையுமே அதிகமாக விளக்காதீர்கள். Show, don’t tell என்பது சிறுகதைகளுக்கு முக்கியமான விஷயம்.
  15. உங்கள் கதாபாத்திரங்களையும், கதையையும் மற்றவர்களை விட நீங்கள் ஒரு
    அவுன்ஸேனும் அதிகம் புரிந்திருக்க வேண்டும்.
  16. கதைகள் பெற்ற பிள்ளைகள் போலத் தான் , மறுப்பதற்கில்லை. ஆனால் வேண்டாத வரிகளை வெட்டியெடுக்கும் போது மாற்றாந்தாய் மனநிலையைக் கொண்டுவந்து தயவு தாட்சண்யம் இல்லாது நடந்து கொள்ளுங்கள்.
  17. கதைகளை முடிக்குமுன் அடுத்தவர்களுடன் விவாதிப்பதில் தவறில்லை. ஆனால் அவர்கள் எழுத்தாளர்களாக இல்லாதிருப்பது உசிதமானது.
  18. கடைசி என்றாலும் எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் இது தான். எழுதாதவர்களை விட எழுதுபவர்கள் அதிகம் வாசியுங்கள்.

Leave a comment