ஆசிரியர் குறிப்பு:

தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்து, வளர்ந்தவர். பொறியியல் பட்டதாரி. பதினைந்து வருடங்களாக சிங்கப்பூரில் வசிக்கிறார். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.

பதினைந்து கதைகள் கொண்ட தொகுப்பில், எல்லாமே சிங்கப்பூரில் நடக்கும் கதைகள். அநேகமாக எல்லாக் கதைகளிலுமே, ஒரு அலைபாய்தல், அமைதியின்மை, பரபரப்பாக நடப்பது அல்லது ஓடுவது என்ற நிம்மதியின்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நால்வர் அமைதியாக உட்கார்ந்து பேசும் கதையான ‘நால்வர்’ கதையிலும் இலக்கியப்பேச்சுடன், மூவர் தன் துயரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், பகிரப்படாத ஒருவரின் துயரம், திரைச்சீலையை மெல்ல விலக்கிப் பார்க்கும் பெண் போல் நம் கண்களுக்கு புலப்படாமல் போகிறது.

வெவ்வேறு யுத்திகளில் கதைகளை எழுதிப் பார்த்திருக்கிறார். ‘கல்மோகினி’ , ‘ நாற்பதிற்குள் நுழைதல்’ போன்ற கதைகளில் கதையம்சத்தை விட, ஒரு உணர்வைக் கடத்தும் யத்தனம் அதிகம். ‘அந்தரத்தில் நிற்கும் வீடு’, ‘ பிடிகடுகு’ போன்ற கதைகள் வாய்மொழிக்கதைகளை நவீனப்படுத்தும் பாணி. ‘ கனவுலக வாசிகள்’, ‘நால்வர்’ போன்றவற்றில் மையக்கதையை விட இலக்கிய விசாரம் அதிகம். பல கதைகளில் எஸ்.ரா வின் தொனி (மொழிநடையல்ல) தெரிவது அவரை அதிகம் வாசித்ததால் இருக்கக்கூடும்.

கணேஷ் பாபுவின் மொழிநடை கவித்துவம் கலந்த உரைநடை (Lyrical prose). சில சமயங்களில் அதுவே கதையின் வேகத்தைக் கடிவாளத்தைப் பிடித்து இழுப்பது போன்ற உணர்வு. சிறப்பான விஷயம், எந்தக் கதைகளிலும் மிகைஉணர்ச்சி என்பதே இல்லை. சொல்லப் போனால் ‘ பூனைக்கண்’ கதையில் சீனு புலம்புவது தான் அதிகபட்ச உணர்ச்சியின் வெளிப்பாடு, ஆனால் கதையின் முடிவில் வரும் டிவிஸ்டுக்காக அந்தப் புலம்பல் மிகவும் தேவையான ஒன்றாகிறது.

அந்நியதேசத்தில் நடுத்தரவர்க்கத்தின் சிக்கல்கள் கதைகளில் பேசப்பட்டிருக்கின்றன. திடீரென்று வேலை போகிறது, மனைவியை வழியனுப்பச் செல்வதற்கு வேலை இடையூறு செய்கிறது, அப்பாவின் சாவிற்கு வரமுடிவதில்லை. மனைவியை வழியனுப்பும் கதையில் அவன் வீடுதிரும்பும் காட்சி முக்கியமானது. இது போன்ற வெளிப்பாடுகளே கதையின் உயரத்தை அதிகரிக்க முடியும். அது போலவே விடுதலை கதையில் அப்பா பற்றி தங்கை சொல்லும் சேதி. இந்தத் தொகுப்பில் பல நல்ல கதைகள் இருக்கின்றன. கணேஷ் பாபு இருத்தலில் இருக்கும் பிரச்சனைகள் குறித்த சில கேள்விகளை இந்தக் கதைகளின் மூலம் எழுப்பியிருக்கிறார். Overall நல்ல தொகுப்பு இது. இவர் தொடர்ந்து எழுத வேண்டும்.

பிரதிக்கு:

யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ. 180.

Leave a comment