ஆசிரியர் குறிப்பு:

கண்டியில் பிறந்தவர். ஆசிரியையாகப் பணிபுரிபவர். பல வருடங்களாகக் கவிதைகள் எழுதி வரும் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு இது.

புனைவுகள், கவிதைகள் என்பவை எல்லையற்ற வெளி. சாதாரணமாக நாம் பேசாததைப் பேச, செய்யாததைச் செய்ய அதில் முடியும். உதாரணத்திற்கு எதிர்வீட்டுப் பெண்ணை நிஜத்தில் கொலைசெய்ய முடியாது எனில் கதையில் அவளைக் கொண்டு வந்து கொன்று விடலாம். பெண்கள் அதிகமாகத் தாங்கள் சொல்ல வேண்டியவற்றை சொல்வதற்கு கவிதைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதனாலேயே கவிஞர்களில் பெரும்பகுதி பெண்கள்.

” ரகசியங்கள் எழுத்துக்களில்
புதைந்து கிடக்கின்றன
அவை ரகசியம் என
அடையாளம் காண முடியாதபடி
புனைவுகள் சூழ்ந்திருக்கின்றன”

பொதுவாக என் உடலை வேண்டுமானால் தொடலாம், மனதிற்குள் நுழைய முடியாது என்பார்கள். இதயவாசல் என்ற பதம் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் முன்பு ஒருசமயம் இதயத்தில் இருந்தவர் இப்போதும் இருக்கிறார் என்று சொல்வதற்கில்லை. அதனால் இவர் Higher stateஐத் தேர்ந்தெடுக்கிறார். ஆன்மாவிற்குள் நுழைந்தவர் அதைவிட்டுப் போவதில்லை.

” என் ஆன்மாவின் கதவுகள்
அலையடங்கிய கடல்
பேரமைதி பரப்பி
ஆழமான சுகந்தம் ஒன்றை
நுகர்ந்து கொண்டிருக்கின்றன”

ஒரு சூழலில், பெண்ணாக இருப்பதென்பது மூச்சுத்திணறல் (Suffocation). அதை அழகியலுடன் சொல்லும் இந்தக் கவிதை தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று.
‘பின்னும் உயிர் வாழும் கானல்’ எனும் பசுவய்யாவின் சோகம் இதிலும் எதிரொலிக்கிறது.

” கற்பனையில் நான் வரைந்த மீன்குஞ்சுகளை ஒரு தொட்டியில்
வளர்க்கிறேன்
மறுக்கப்பட்ட சொற்களை உண்டு வளரும்
இம் மீன்களுக்கு
அடிக்கடி காய்ச்சல் வரும்
வெளியுலகம் காணாத
என் மஞ்சள் மீனின் பெருமூச்சு
குலைந்து கசங்கித் தீர்ந்து போகும்
விம்மல்களில் அலைவுறும்
அரூப நடனங்களில் வழிந்தோடும்
உப்புக்கரைசலில்
சுவாசத்தின் கீறல்கள் நகர்கின்றன
அச்சம் மேலெழும் பொழுதுகளில் எல்லாம்
பாசிபடர்ந்த குறுங்கற்களுக்குள்
என் கண்களை அடகு வைக்கிறேன்
இரவுகளின் பேரிரைச்சல்களில் கூட
நீச்சல் ஓய்ந்ததேயில்லை
எப்போதும் என் கைகளில் இருக்கும்
பிரார்த்தனைகளை
மீன் தொட்டிக்குள் திணிக்கிறேன்

மிகத் தாமதமான ஓர் நாளில்
என் மஞ்சள் மீன்
கடலோடு போகும்”

படிமங்கள் மற்றும் உருவகங்கள் இவரது கவிதைகளில் ஒளிந்திருக்கும் உணர்வை வெளிக் கொண்டு வருகின்றன

” சில இரவுகளில் என் படிக்கட்டில்
நட்சத்திரங்கள் வீழ்ந்து கிடக்கும்”

” விரகதாபங்கள் அலங்கரிக்கும்
ஒளியின் நகக்குறிகளை……”

” கர்ப்ப பிசுபிசுப்பு
மாறாத வெண்பஞ்சு மேகம்”

” என் பளிங்கு ஞாபகத்தின் மீது
ரோஜாத் தோட்டம் துளிர்விடும்”

” இருட்டின் கதிர் இழந்து
பனிப்புகார் படர்ந்த எண்ணமெல்லாம்”

பெரும்பான்மை கவிதைகள் அகவயமானவை. விடுதலைக்காகச் சிறகை விடாமல் அடித்துக் கொண்டிருக்கும் பறவையின் உருவை நினைவுறுத்தும் கவிதைகள். நம்பிக்கை, அவநம்பிக்கை என்ற இரண்டு குதிரைகளில் மாறிமாறிப் பயணிக்கின்றன.

மொழியை திறமையாக உபயோகிக்க இவருக்குத் தெரிந்திருக்கிறது.
‘ மறுக்கப்பட்ட சொற்களை உண்டு வளர்தல்’
‘இரவுகளின் பேரிரைச்சல்’ என்பது போன்ற
பல வார்த்தைக் கோர்வைகள் அங்கங்கே நம்மை நிறுத்தி யோசிக்க வைக்கின்றன.
கவிதைகளுக்குள் மூழ்க நம்மை நாம் அனுமதிக்கையில் கவிஞரையும் அவரது ஆத்மவிசாரத்தையும் தெரிந்து கொள்கிறோம். கவிதை வாசிப்பில் நமது கொள்முதல் என்பது அவையே. தொடர்ந்து எழுதுங்கள்.

பிரதிக்கு:

தாயதி +41 793343522 (இலங்கை)
விற்பனை உரிமை பாரதி புத்தகாலயம்
044-24332924
முதல்பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ. 75.

Leave a comment