ஆசிரியர் குறிப்பு:

திருச்சிராப்பள்ளியைச் சொந்த ஊராகக் கொண்ட கோ.கமலக்கண்ணன் சிறுகதை, குறுநாவல் மற்றும் கட்டுரைகள் எழுதிவருவதுடன், மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார். தமிழினி வெளியீடாக, இவருடைய ஐந்தாவது மொழிபெயர்ப்பு நூல் இது.

தல்ஸ்தோயின் இந்தக் குறுநாவல், இரண்டு வகைகளில் முக்கியமானது, 1857ல் முடித்த நாவல், அவருக்கு திருப்தி ஏற்படாமல் திருத்தி எழுதப்பட்டு 1963ல் இலக்கியப் பத்திரிகையொன்றில் வெளியாகிறது. இந்த நாவலை முடிப்பதற்கான தூண்டுதல் 1862ல் சூதாட்டத்தில் அவர் பட்ட கடன். இந்த நாவலிலும் கொசாக் போரின் கடைசியில் சேர்ந்த தல்ஸ்தோயின் சுயஅனுபவக்கூறுகள் உள்ளது என்று நம்பப்படுகிறது.

ஒலினின் அவனுக்கு அவனே கேட்டுக் கொள்ளும் கேள்விகளில் ஆரம்பிக்கும் நாவல், அறியாத நிலத்தின் பயணத்திற்கும், புதிய சூழலில் அவன் தன்னை தயார்படுத்திக் கொள்வதிலும், காதல்வசப்படுவதிலும், பெறுவதை விட கொடுப்பதே இன்பம் என்பதை அறிவதிலும், எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்வின் உண்மையைத் தெரிந்து கொண்டு பயணத்தை முடிப்பதுமே இந்த நாவல். பாசாங்கு மிகுந்த நகர வாழ்வை வெறுத்து, பழங்குடி நோக்கிச் செல்பவன் மெய்ப்பொருளைக் கண்டுகொண்டானா என்பதற்கான விடை சொல்லுதலே இந்த நாவல்.

வர்க்கவேறுபாடு இந்த நாவல் முழுவதுமே வந்து போகும். போரில் மட்டுமல்ல, சாதாரண வாழ்விலும், கடனை அடைப்பதற்காகப் போருக்கு சென்றாலும் Noble என்ற வர்க்கம் எப்போதும் தனியானது, சாதாரணர்களுடன் அது ஒன்று கலக்காது. ஒருவேளை கலக்க நினைத்தாலும் இந்த வர்க்கத்தின் மீதிருக்கும் அவநம்பிக்கை காரணமாக எதிர்தரப்பு ஒத்துக்கொள்ளாது.

பின்னாட்களில் மகத்தான பெரும் படைப்புகளை எழுதுவதற்கான ஆரம்பம், இந்த நாவலிலேயே எழுப்பப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. முக்கிய மூன்று கதாபாத்திரங்களுடன், அவர்களது பின்புலம் குறித்த தகவல்களோடு வாசகர்களை எளிதாக நாவல் உள்செலுத்தும் பணியைச் செய்கிறது. அதே போல் காதலின் அவஸ்தைகள், அதனால் மாறும் மனோபாவங்கள், தத்துவார்த்தம் எல்லாமே இந்த நாவலில் இருந்தேஆரம்பித்து விடுகின்றன.

கமலக்கண்ணன் முன்னுரையில் கூறியிருப்பது போல, செவ்வியல் இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வருகிறார். தமிழ் மட்டும் வாசிக்கத் தெரிந்தோருக்கு மொழிபெயர்ப்புகள் கொடை என்பதை நான் பலமுறை கூறி இருக்கிறேன். இரண்டாவதாக இவரது தேர்வுகள். The Cossacks நாவலை ஆங்கிலத்தில் படிப்பவர்களிலேயே அதிகம் வாசித்திருக்கமாட்டார்கள். அதைத் தமிழுக்கு எடுத்துக் கொண்டு வருவது பெரும்பணி.

இப்போது இவரது மொழிபெயர்ப்பை எடுத்துக் கொண்டால், நாவலின் ஆரம்பத்தின் முதல் பத்தி Perfect. நாவல் முழுதும் ஏன் அதே மொழிநடையை இவர் கையாளவில்லை என்பது எனக்கு உண்மையிலேயே விளங்கவில்லை. தமிழ் மட்டுமே வாசிக்கத் தெரிந்த வாசகர்களுக்குத் தானே இந்த நூல்? ஆங்கிலத்தில் அதிகபட்சம் மூன்று மணிநேரங்களில் நான் வாசித்த இந்த நாவல், தமிழில் எனக்கு முழுநாளை எடுத்துக் கொண்டது. தனியாக வரிகளை எடுத்துக் Quote பண்ண நான் விரும்பவில்லை. இளம்வயதில் இவ்வளவு Effort எடுப்பவரை Discourage செய்யக்கூடாது என்ற பயமும் ஏற்படுகிறது. ஆனால் யாராவது சொல்லித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு முறையும் அது நானாகவே ஏன் இருக்கிறேன் என்பதே கேள்வி.

பிரதிக்கு:

தமிழினி 86672 55103
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ.290.

Leave a comment